யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு இலங்கையின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, ​​போரினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்தும், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்குவது குறித்தும் கேட்டறிந்ததாகவும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய இராச்சியத்தில் ஆதரவை வழங்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி தொடர்பான சர்வதேச முயற்சிகளுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து தலைமைத்துவத்தை வழங்கும் எனவும் டேவிட் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.