ரணிலுடன் இரகசிய பேச்சு நடத்திய அரசாங்க தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தரப்புடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சென்றுள்ளார்.

“ நீங்கள்தான் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்” என இந்த சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் எனவும் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான பின்னணியில், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணிலுடன் இணையலாம் என்ற வதந்தியை அரசாங்கத் தரப்பினரே சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க , ராஜபக்சவினருடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டதை நன்கு அறிவார்கள்.

ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவில்லை என்றாலும் அவரது பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட படையினர் வழங்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்ச தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் காரணமாகவே இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.