ரணில் ஒரு காய்ந்த மரம், நாம் அவரை கணக்கெடுப்பதில்லை, பின்னால் ஓட எம்மில் எவருக்கும் பைத்தியம் இல்லை – பொன்சேகா

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு காய்ந்த மரம் போன்றவர் என்பதுடன், காணாமற்போன அரசியல்வாதி என்ற நினைப்பே எம்மிடம் உள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவர் சொல்லும் கருத்துகள் செய்யும் செயற்பாடுகள் குறித்து நாம் கணக்கெடுப்பதில்லை; எமக்கு அக்கறையும் இல்லை என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், எமது கட்சியிலிருந்து 60 பேர், ரணிலுடன் சென்றுவிடுகின்றனர் என்கிறார்கள் எம்மிடம் 45 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர் எனத் தெரிவித்த அவர்,ஒருவர் பின்னால் ஓடும் அளவுக்கு எமது உறுப்பினர்களின் நிலை மாறிவிடவில்லை.

நாம் வேண்டாமென்று ஒதுக்கிய ஒருவர் பின்னால் மீண்டும் ஓடும் அளவுக்கு எம்மில் எவருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை என்றார். இதேவேளை,நாட்டின் தற்போதைய நிலையில், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் போதுமானதாக இல்லை என்பதுடன், அவை பிழையான தீர்மானங்களாகும்.

அதனால் தான் சர்வகட்சி மாநாட்டை நடத்த வேண்டுமென நாம் நினைக்கிறோம் இவ்வாறான

நேரத்தில் தான் அரசாங்கம் நாட்டிலுள்ள சகல கட்சிகளுடனும் கலந்துரையாடி அவர்களது அபிப்ராயங்களையும் செவிமடுத்து செயற்பட வேண்டும் என்றார்.

“எனவே, இந்த அரசாங்கம் அதனை செய்யத் தயாரில்லை என்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சர்வகட்சி மாநாடு குறித்து மீண்டும் அரசாங்கத்துக்கு நினைவுப்படுத்தினார்” என்றார்.