லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பணம்

லொஹான் ரத்வத்த நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் படி பாரிய குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்றைய தினம் (13), மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அரசியல் கைதி தொடர்பான வழக்கில், சிரேஷ்ட சட்டத்தரணி  கே.எஸ்.  இரத்தினவேல் சமர்ப்பணம் மேற்கொண்டிருந்தார்.

இன்றைய தினம் (13), மன்னார் மேல் நீதிமன்றத்தில் சிவசுப்பரமணியம் தில்லை ராஜா என்ற அரசியல் கைதியின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்கில்  பிரதான வழக்கை விட மேலதிக சமர்பணம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  சிவசுப்ரமணியம் தில்லை ராஜ் என்பவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் இருக்கின்றார். அத்துடன், அவரையும் சேர்த்து  14 ஆண்  சிறைக்கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த தமிழர்கள் ஆவர். இதை தவிர, நான்கு  அல்லது ஐந்து பெண் கைதிகளும் உள்ளனர் என்றார்.

“செப்டெம்பர் 12ஆம் திகதியன்று  சிறைச்சாலை சீர்திருத்தத்துக்கு பொறுப்பான  இராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்த, அந்த சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து 6 மணியளவில் அந்தச் சிறைச்சாலை அதிகாரிகளை தனது அதிகாரத்துக்கு உட்படுத்தி, அவர்களை  பல வந்தப்படுத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  தமிழ் சிறைக்கைதிகளை வெளியில் கொண்டு வரும்படி ஆணையிட்டுள்ளார்.

“அவரது உத்தரவுக்கு அடி பணிந்த சிறைச்சாலை அதிகாரிகள், பத்து கைதிகளை வெளியில் கொண்டு வந்து, அந்த முற்றத்தில் நிறுத்தி இருக்கிறார்கள். இந்த தருணத்தில், அந்த இராஜாங்க அமைச்சர் குடிபோதையில் இருந்ததாக அதனை அவதானித்த சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களை இராஜாங்க அமைச்சர் ஆபாச வார்த்தைகளால் பேசி அதன் பின்னர் அவர்களை முழந்தால் இட கட்டாயப்படுத்தி உள்ளார்.

“பயத்தின் நிமித்தம் தமிழ் அரசியல் கைதிகள்  முழந்தாலிட்டிருக்கின்றார்கள். அத்துடன், ஒவ்வொருவராக  அழைத்து, ‘நீ இராணுவத்தினரை கொலை செய்தாயா?’ என்று அச்சுறுத்தும் விதமாக கேட்டிருக்கின்றார் . அதே நேரம் இன்றைய  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  சிவசுப்பரமணியம் தில்லை ராஜா  என்பவரையும் கூப்பிட்டு, ‘நீ யாரை கொலை செய்தாய்?’ என கேட்டிருக்கிறார்.

“அவர் முதலில், ‘எனக்கு சிங்களம் தெரியாது’ என்று கூறிய நிலையில், பிறகு ஒரு மொழிபெயர்ப்பாளரை கூப்பிட்டு  மொழிபெயர்த்து சொல்லப்பட்டது. அப்போது குறித்த அரசியல் கைதி, ‘நான் கொலை ஒன்றும் செய்யவில்லை’ என்றும்  ‘எனக்கு ஒரு வழக்கு மன்னார் நீதிமன்றில் நடைபெறுகிறது’ என தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அவரை தூசண வார்த்தைகளால் பேசி விட்டு, இன்னும் பல கைதிகளை அச்சுறுத்தியுள்ளனர்.

“அத்துடன், இன்னோர் அரசியல் கைதியை அழைத்து அவருடைய தலையில் துப்பாக்கியை வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார். மேலும், எல்லா தமிழ் அரசியல் சிறை கைதிகளிடமும், ,’நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஜெனிவாவுக்கும் முறைப்பாடுகளை அனுப்பியிருக்கிறீர்கள். ஆனால் ஒன்றும் நடக்காது நடக்க விடமாட்டோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

“மேலும், ‘ஜனாதிபதி எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது, நீ தமிழ் அரசியல் கைதிகளை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். விடுதலை செய்யவும் முடியும், அல்லது அவர்களை ஒழித்துக் கட்டவும் முடியும். அதற்கான அதிகாரத்தை தருகிறேன் என்று சொல்லித்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். எனவே, உங்களை நான் எதுவும்  செய்யலாம். நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடு செய்யகூடாது’ என்றெல்லாம் சொல்லி, கடைசியில் அந்த துவக்கை தலையில்  வைத்த பொழுது சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு, அவரை சமாதானப்படுத்தி வெளியே கொண்டு போயிருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் (13), இத்தகைய சம்பவத்தை மன்னார் மேல் நீதிமன்றத்தில்  கூறி சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது” என, சிரேஷ்ட சட்டத்தரணி இரத்தினவேல் தெரிவித்ததார்.

மேலும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம்  இராஜாங்க அமைச்சர்  லொஹான் ரத்வத்த  நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்குள்ளாகின்றார் எனவும் சமர்பணத்தில் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார் .

ஏனென்றால் இந்த சிறை கைதிகள் யாவரும் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இத்தகைய சிறைக்கைதிகளை யாராவது துன்புறுத்தினாலோ, அச்சுறுத்தினாலோ வேறு எந்த வகையில் சித்திரவதைக்கு உட்படுத்தினாலோ அவர்கள் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சவாலுக்கு உள்ளாக்குகிறார்கள்.

நீதிமன்றத்தை அவமதிக்கிறார்கள்  என்ற அடிப்படையில் இந்த விடயத்தை நீதிமன்றம் கையாள வேண்டும். இந்த விடயம் பற்றி ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை ஒன்றையும்  சமர்பணத்தின் ஊடாக கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராஜங்க அமைச்சர் அது மட்டுமல்ல  இலங்கையின் குற்றவியல்  சட்டங்களின் படி ஒரு பாரிய குற்றத்தை இழைத்திருக்கின்றார்.  ஒரு துப்பாக்கியை தலையில் வைப்பதன் மூலம் ஒருவரை கொலை செய்ய எத்தனித்தமை என்ற குற்றமும் அவர் மீது சாட்டப்படலாம்.

இந்த விடயத்தில் சாதாரண சட்டங்களை மீறினால் உண்மையில் பொலிஸ் திணைக்களமும், சட்ட மா அதிபர் திணைக்களம் தான் உடனடியாக அவரை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அதேநேரம் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நீதிமன்றத்துக்கு  சட்டரீதியாக அழைக்கப்பட வேண்டும் என்பதுடன், இந்த நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படும்  குற்றம் சாட்டப்பட்டவர் அவருடைய சாட்சியமும் பதிவாக்கப்பட வேண்டும் எனவும் சமர்பணத்தில் குறிப்பிட்டதாகவும், சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனவே, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ததை அடுத்து மேல் நீதிமன்ற நீதவான்  சிறைச்சாலை அத்தியட்சகர் நாயகம்  அவருக்கு ஒரு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்   12ஆம் திகதி செப்டெம்பர் மாதம் அநுராதபுரத்தில் நடைபெற்ற விடயம் சம்பந்தமாக விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, ஒரு கட்டளை நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

அதே நேரம்  நவம்பர் 30 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்படும் பொழுது, அந்த சிறைச்சாலை அத்தியட்சகர் நாயகத்தின் அந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும் நீதி சட்டத்துறை அமைச்சர் அலிசப்ரி, சமீபத்தில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்கிருந்து வெளியேறும் போது, அவர் கூறியிருக்கிறார். தான் தமிழ் அரசியல் கைதிகளை  நேரடியாக சந்தித்து பேசியதாகவும் அவர்கள் எந்த வித அச்சுறுத்தலும் தங்களுக்கு இருக்கவில்லை என்று சொன்னதாகவும் கூறியிருந்தார்.  இது ஒரு அப்பட்டமான பொய் என்றே நான் கூற வேண்டும்.

இன்று நீதிமன்றத்துக்கு வந்திருந்த அரசியல் கைதியின் கருத்தின் படியும்   சம்பவம் நிச்சயமாக நிகழ்ந்திருக்கிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க தயாராக இருந்திருக்கிறார். ஆனால் நீதிமன்றம் முதலில் அந்த சிறைச்சாலை நாயகத்திடம் இருந்து அறிக்கை பெற்ற பின்னர் அவருடைய சாட்சியத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைக் கொண்டு இருக்கிறது என்றார்.