வட மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் குறைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் கூறியுள்ளார்.
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இராணுவத்தின் பங்கேற்புடன் நீர், சுற்றாடல், மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவத்தின் பிரசன்னம் குறித்து அவர் தமது கரிசனையினை வெளிப்படுத்தியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், வடக்கில் பாரியளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருவதாகவும், விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே வடக்கில் தங்கியுள்ள மேலதிக இராணுவத்தினரை உடன் வெளியேற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இராணுவத் தரப்பின் பங்கேற்புடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுகின்மையினால் தம்மால் அதில் கலந்து கொள்ள முடியாது எனவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.