வடக்கு, கிழக்கில் சீனாவுக்கு எந்த நடவடிக்கைளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது -ரெலோ தலைவர் செல்வம்

சீனாவின் அனுசரணையில், சீனாவின் அடிவருடிகள் இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை குழப்ப நினைத்தால் நிச்சயமாக அதனை எதிர்த்து நிற்போம். அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என்பதையும் கூறிக்கொள்கின்றேன் என ரெலோ அமைப்பின தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற சேர் பெறுமதி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாரதப் பிரதமர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார். இதன்போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த விடயம் சீனாவுக்கு வலிக்கும் என்றும்,அமெரிக்காவுக்கு வலிக்கும் என்றும் இங்கே பலர் கதைக்கின்றனர். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் இலங்கையை மேலே கொண்டு வருவதற்கான முயற்சியை முதலில் செய்தது இந்தியாவே. இதுவே பக்கத்து நாடு. இந்த ஒப்பந்தங்கள் சரியானவை என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் சீனாவின் அனுசரணையில், சீனாவின் அடிவருடிகள் இந்த விடயத்தில் குழப்ப நினைத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை எதிர்த்து நிற்போம். அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என்பதனையும் கூறிக்கொள்கின்றேன்

பட்டலந்த வதைமுகாம் விடயத்துடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளோம். இவ்வாறான விடயங்கள் சிங்கள தேசத்தில் நடக்கும்போது ஏதோவொரு வகையில் அது தொடர்பில் விசாரணை நடத்தவோ,அது தொடர்பில் ஆராய்வதற்கான குழுவை அமைக்கவோ மற்றும் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கோ ஏதோவொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதன்படியே பட்டலந்த அறிக்கை வந்துள்ளது.

ஆனால் வடக்கில் கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் பல விடயங்கள் நடந்துள்ளன. 1983இல் தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து விரட்டப்பட்டனர். சிறைகளில் தங்கதுரை, குட்டிமணி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். 83 கலவரம் வெலிக்கடை சிறைச்சலையிலேயே உருவாக்கப்பட்டது. இந்த கலவரம் தமிழருக்கு எதிரானது என்பதனால் அது தொடர்பான விசாரணைகள் கைவிடப்பட்டது.

இந்நிலையில் புதிய அரசாங்கம் 1983 கலவரத்தில் படுகொலை செய்தவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக அறிக்கையை சமர்ப்பிக்க குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் பிரச்சினையென இதனை தட்டிக்கழிக்கக் கூடாது என்றார்.