தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இன்று (14) பேப்ரல் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபைமுதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலான இந்த விசேட குழு இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் கூடவிருப்பதுடன், இதில் குழுவின் அழைப்பையேற்றுக் கலந்துகொள்ளவிருக்கும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பேப்ரல்) தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளது.
அதேநேரம், பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைப்பது தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்வைத்த யோசனைக்கும் விசேட குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்தார்.
அத்துடன், இக்குழுவின் சகல கூட்டங்களின்போதும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாட்டாளர்களை பங்கெடுக்கச் செய்யுமாறும் தலைவர் அறிவுறுத்தியிருப்பதாக ரோஹனதீர அவர்கள் குறிப்பிட்டார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவுக்கு அரசியல் கட்சிகளின் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் பூர்த்தியடைகிறது.