விடுதலைப்புலிகள் அமைப்பின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பிரதான மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டு வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் காலமானார்.
1936 ஆம் ஆண்டு பிறந்த வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் தபாலதிபராக பணியாற்றி வந்த நிலையில்,1994 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறை பிரிவுடன் இணைந்து மொழிபெயர்ப்பு துறையில் செயற்பட்டு வந்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் நடைபெற்ற பேச்சுகளின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார்.
இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த ஜோர்ஜ் மாஸ்டரை,2016 ஆம் ஆண்டு அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.
இந்நிலையில் ஜோர்ஜ் மாஸ்டர் மறைவுக்கு நோர்வேயின் முன்னாள் சமாதான துதுவர் எரிக் சொல்ஹெய்ம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தைகளின்போது நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளராக ஜோர்ஜ் மாஸ்டர் பணியாற்றினார்.
அவர் சிறந்த தமிழ் தேசப்பற்றாளர்.சமாதானத்தில் மிகுந்த ஆா்வம் கொண்டிருந்தவர்.அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.