இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 75 ஆண்டுகால ஜனநாயக மற்றும் இறையான்மை உறுதிப்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் பகிரப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களை மறுத்துள்ளார்.
‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில் , ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்பட்டமான பொய்களை பரப்பியிருக்கின்றார்.
75 ஆண்டுகளாக அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. அதேபோன்று தொடர்ந்தும் கூட்டாண்மையுடன் எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.