அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையினை நீக்கி வர்த்தமானியை வெளியிட்டமை மக்களின் இயல்பு வாழ்வில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தவுள்ளன. அத்துடன் உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையை உள்ளாகியுள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் கட்டுப்பாட்டு விலை நீக்கம் போன்ற விடயங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மக்களின் இயல்பு வாழ்வில் ஏற்கனவே வருமானங்களை இழந்து அரசாங்க நிவாரணங்கள் எதுவும் இன்றி மிகவும் வறுமையில் அன்றாட வாழ்வை போராட்டத்தின் மத்தியில் கொண்டு செல்லும் போது அடிப்படை உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையை உள்ளாகியுள்ளது.
தொடர்ந்தும் அன்றாடம் காச்சிகள் தொழில்களை இழந்து வருமானம் இன்றி குடும்பங்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் பொருட்கள் விலை உயர்ந்து செல்லுமாயின் நாட்டில் கொடிய வறுமை மாத்திரமல்ல பஞ்சம் பசி பட்டினி கொள்ளை களவு தற்கொலை வன் செயல் என்பன அதிகரிக்கவே வாய்ப்புக்கள் உள்ளன அத்துடன் நாட்டின் இயல்பு நிலையும் கேள்விக்குள்ளாகி அவசர நிலை உருவாகும்.
கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுவதால் மொத்த வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் பகல் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள் இதனால் குறிக்கப்பட்ட தரப்புக்கள் பணம் சம்பாதிக்கவும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் மக்களின் இயல்பு வாழ்வு அவல நிலைக்கு தள்ளப்படவும் வழி வகுக்கும் . ஆகவே அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்