தமிழக அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பெயரில் ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது தற்போது இந்த அமைச்சகத்தின் பெயர் மாற்றம் நடைபெற்று இருக்கிறது.
தமிழக அமைச்சரவையில் சில துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
‘தமிழகத்திலுள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்கள் நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் அரசின் இலக்குகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன்’ என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ் குடும்பங்களிடமும், அவர் தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டு சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனி தமிழும், தமிழகமும் வெல்லும்.
உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனதில் வைத்து தமிழக அரசு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை பெயர் மாற்றமாக இல்லாமல், செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை திட்டங்களாக கொண்டு செயல்பட தூண்டுகோலாக இருக்கும்.’என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி கே எஸ் மஸ்தான், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.