ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

‘என் சாவுக்கு காரணம்’ எனும் தமிழ் வாக்கியம் ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பிலான நிழற்படம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி பயன்படுத்திய அறையில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கையெழுத்து தொடர்பிலான விசேட நிபுணர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே, உயிரிழந்த சிறுமி பாடசாலை காலத்தில் பயன்படுத்திய புத்தகங்களை, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம், உயிரிழந்த சிறுமியினால் எழுதப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

என் தங்கைக்கு ஆங்கிலம் தெரியாது ; அண்ணன்

எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தங்கையான ஹிஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை என, மரணமடைந்த டயகம சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த ஹிஷாலினி ஜூட், அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பு வரையில் மட்டுமே கல்விப்பயின்றார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டபோது, எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவர் தங்கவைக்கப்பட்ட அறையில், ஆங்கிலத்தில், ‘எனது மரணத்துக்கு காரணம்” என எழுதப்பட்டுள்ளது, இதுதொடர்பில் கேட்டபோதே ஹிஷாலினியின் சகோதரன் திருபிரசாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனக்குத் தெரிந்தவகையில், ஏதாவது ஒன்றை பார்த்துகொண்டு எழுதும் திறமை எனது தங்கையிடம் இருக்கிறது. ஆனால், ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வகையில் எனது தங்கைக்கு ஆங்கில அறிவு இருக்கவில்லை.