முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் எந்த சாட்சியங்களும் இல்லாததால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.
அசாத் சலி விவகார வழக்கு விசாரணைகள், இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதன்போது அசாத் சாலி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளின் தொகுப்பு மன்றில் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அசாத் சாலிக்கு எதிராக எந்த சான்றுகளும் இல்லை எனவே அசாத் சாலியை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது மன்றில் பிரசன்னமாகியிருந்த சி.ஐ.டி. அதிகாரிகள், இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவும், அத்திணைக்களத்தின் உதவியை பெறவும் கால அவகசம் வேண்டும் என கோரியுள்ளனர்.
அதன்படி அதற்கான கல அவகாசத்தை அளித்துள்ள நீதிமன்றம் எதிர்வரும் 13 ஆம் திகதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கவுள்ளது.