அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை மட்டுப்படுத்த நேரிடும் – அமைச்சர் கஞ்சன

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதி வரையறை செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தினூடாக அமைச்சர் இதனை இன்று(25) பதிவிட்டுள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், மொத்தமாக எரிபொருள் கிடைத்தாலும் கூட அது தேவைக்கு போதுமானதாக இல்லை என கூறியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை கட்டாயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன பதிவு இலக்கத்தின் கடைசி எண்ணுக்கு அமைய, எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாத்திரமே எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் அதன்பின்னர் தேசிய எரிபொருள் அனுமதி அட்டைக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிரப்பு நிலையங்கள் மற்றும் லங்கா IOC வலையமைப்பினூடாகவும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.