சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கும், கட்டுமானம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிகமான இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாக, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பொறியியலாளர் அஹ்மத் பின் சுலைமான் அல்ரஜி ஆகியோருக்கு இடையிலான செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சில காலமாக கட்டுமானத் துறையில் பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்த பல வேலை வாய்ப்புகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் திறமையான தொழிலாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கலந்துரையாடலின் போது, சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர், சவூதி அரேபியாவில் நிர்மாண மற்றும் சுகாதாரத் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு இருதரப்பு குழுக்களை நியமிக்க ஒப்புக்கொண்டார்.
இலங்கை வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் நிலவும் முறைகேடுகளை களைவது தொடர்பாக 30 நாட்களுக்குள் பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழுவொன்றை நியமிப்பதற்கும் அவர் இணக்கம் தெரிவித்திருந்தார்.
இலங்கை தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தை மேலும் அதிகரிக்க சவூதி அமைச்சர் இணக்கம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான பரிந்துரைகளும் முப்பது நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சவூதி அரேபியாவில் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது இலங்கையில் உபரி ஊழியர்களைக் கொண்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
வீட்டுப் பணியாளர்களின் ஆட்சேர்ப்புக் கட்டணம் மற்றும் அது தொடர்பான செலவுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், தவறான செயல்களில் ஈடுபட்ட சுமார் 400 வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.