அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது.நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குள் சென்ற பின்னர் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு முன்னாள் அரசதலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.”
இந்த அரசு புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது. இதை அரச தலைவரும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்னமும் புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றனர்.
இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் பேர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இன்று வீதிகளில் பொருட்களைக் வாங்க வரிசையாக நிற்கின்றனர். பொருட்களின் விலையேற்றத்தாலும் பொருட்களின் பற்றாக்குறையாலும் மக்கள் இன்று திண்டாடுகின்றனர்.
எனவே, பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்கு முன் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக ஆட்சி மலரும்” – என்றார்.