கொவிட் தொற்று நிலைமையால் நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு மற்றும் அந்நிய செலாவணிச் சந்தைக்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு ஒரு சில பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய வெளியகப் பரிவர்த்தனைகளை நிறுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளைகள் செல்லுபடியாகும் காலம் 2021 யூலை மாதம் 01 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதால், அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்படக்கூடிய ஆபத்து நேர்வைக் குறைப்பதற்கும் நிதிப்பிரிவின் நிலைபேற்றுத்தன்மையைப் பேணவும் குறித்த கட்டளைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கி கருத்துத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அந்நிய செலாவணி வெளியகப் பரிமாற்றலின் அடிப்படையில் ஒரு சில மட்டுப்பாடுகள்/தடைகள் விதிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை தொடர்ந்தும் 2022 ஜூலை மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 06 மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நிதி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.