பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் கொழும்பில் இன்று (16) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்றைய தினம் (16) காலி வீதி , கொள்ளுபிட்டியிலிருந்து பம்பலப்பிட்டி வரையான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதன் போது பொலிஸாரினால் பிரதான வீதி மறிக்கப்பட்டிருந்தமையால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மெரைன் டிரைவ் வீதியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
150 நாட்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறும் பயங்கரவாத தடைச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்குமாறும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யூனியன் ப்ளேஸ் ஊடாக காலி முகத்திடலுக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.