அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் தினத்தில் தமிழினமே நீதிக்காக ஓரணியில் எழுந்துநில்!

2000 த்திற்கும் மேற்பட்ட நாட்களாக 138 உயிரிழப்புகளுடன் உறுதியுடன் நீதிக்காகப் போராடும் பாதிப்புற்ற கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவளி- மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்.

சிறிலங்கா அராசங்கம் ஈழத்தமிழ் மக்கள் மேல் மேற்கொண்ட இனஅழிப்பு முள்ளிவாய்க்கால் படையெடுப்பு முடிவடைந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆயினும் 2009 முதலே தங்கள் கிட்டிய உறுப்பினர்களை வலிந்து காhணமலாக்கிய சிறிலங்காவின் இனஅழிப்புச் செயலுக்கான தண்டனை நீதியும், தங்களின் வாழ்வுக்கான பரிகார நீதியும் வழங்கப்பட்டே ஆகவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் 2000க்கும் மேலான நாட்களாக 138 போராட்டக்கார்கள் நீதியின் தாகத்துடனேயே காலமான துன்பத்தையும் தாங்கிக்கொண்டு உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிiலையில் ஐக்கிய நாடுகள் சபையின் 11வது வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோருக்கான அனைத்துலக நாள் ஆகஸ்ட் 30ம் திகதி இடம்பெறுகிறது. இந்நேரத்தில் உலக இனமாக உலகின் பலநாடுகளிலும் இன்று திகழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தமிழர்கள், ஈழத்தின் தெருக்களில், வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள், 2009 ஆண்டு முதல் இன்று வரை 13 ஆண்டுகளாகக் குளிரிலும் வெய்யிலிலும் பசியிலும் நோயிலும் கொஞ்சமுமு; தளராது தெருவில் இறங்கி, “எங்கள் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது? எங்கு உள்ளனர்? எத்தகை நிலையில் உள்ளனர்? என இதற்குப் பொறுப்பான சிறிலங்கா அரசாங்கமே பதில் சொல்” என, வாடி வதங்கி ஏங்கித் துடித்துப் போராடிக் கொண்டிருக்கிற, பாதிப்புற்ற எமது உடன்பிறப்புக்களின், துன்பநிலை துயரநிலையை மாற்ற நாம் என்ன செய்துள்ளோம் என்பதை எண்ணிச் செயற்பட வேண்டிய நேரமிது.

ஐக்கிய நாடுகள் சபையில் “ வலிந்தோ அல்லது மனவிருப்பின்றியோ காhணமலாக்கப் பட்டோருக்கான செயற்பாட்டுக் குழு” என்னும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் அலுவலகம் பாதிப்புற்றவர்களின் நலன்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த அலுவலகத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் எவரும் தொடர்பு கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் குறித்த தகவலை, “எல்லா ஆட்களையும் வலிந்து காணாமலாக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்கான சாசனத்தின்” அடிப்படையில் தெரிவித்து, நீதி கோர உரிமையுண்டு. 06.10.2020 இல் இடம்பெற்ற 36வது கூட்டத்தின் படி பாதிப்புற்றவர்களுடைய குடும்பத்தினருக்கும், பாதிப்புக்குச் சான்றாதாரங்களை அளிக்கக் கூடிய எவருக்கும், இந்த செயற்பாட்டுக் குழுவினர் தங்களாலான இயன்ற உதவிகள் அனைத்தையும் அளித்து அவர்களின் பதிவுகளை மேற்கொள்ளல் வேண்டுமென்ற மேலதிக தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவைப் பொறுத்த மட்டில் பாதிப்புற்றோரின் பதிவுகளை மேற்கொள்வதற்கான தனியான அலுவலகமும் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது. ஆயினும் உலகத்தமிழர்கள் குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்கள் இந்த விடயத்தில் போதிய கவனம் செலுத்தாது இருப்பதால் இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் குறித்த பதிவுகள் பல இடம்பெறாத நிலையே தொடர்கிறது.

இந்த செயற்பாட்டுக் குழுவில் ஒரு வழக்கைப் பதிவு செய்வதற்கு

பாதிக்கப்பட்டவரின் முழுப்பெயர்
காணாமலாக்கப்பட்டவரைக் கைதுசெய்த நாள் மாதம் திகதி
எந்த இடத்தில் அது நடந்தது என்பது
அரசு அல்லது அரசு ஆதரவு படையினர் சம்பந்தப்பட்டதற்கான விபரங்கள்
தேடப்பட்டது தொடர்பான ஏதாயினும் தகவல் கிடைத்து இருந்தால் தெரிவித்தல்
அந்தத் தகவலை அளித்தவர் குறித்த விவரம்
என்னும் ஆறு விடயங்களும் உள்ளடக்கப்பட்ட முறையீடு

Email: ohchr-wgeid@un.org
Fax: +41 22 917 9006 (please indicate: “For the attention of: WGEID”).
Mail: Working Group on Enforced or Involuntary Disappearances Office of the High Commissioner for Human Rights Palais des Nations, 8-14 Avenue de la Paix CH-1211 Geneva 10, Switzerland

என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அரசு அல்லாதவர்களின் முறையீடுகள் ஏற்கப்பட்டு அதற்கான ஏற்புப் பதில் அளிக்கப்பட்டதன் பின்னரே அவை முறையீடு செய்யப்பட்டது என்கிற சட்டநிலைத் தகுதியைப் பெறும். அவ்வாறு சட்டத்தகுதியை பெற்ற முறையீட்டாளரை நேரடியாகவோ அல்லது ஒன்லைன் மூலமோ செயற்குழுவினர் சாட்சிய நிலையில் ஒரு மணி நேரமளவில் உரையாட அழைப்பர். அந்த உரையாடலின் அடிப்படையிலேயே அதில் உள்ள விடயங்கள் விசாரணைக்குரியனவாகப் பதிவாகும்.

இந்த முறைமையின் வழி பாதிப்புற்றவர்களை அவர்களது பாதிப்புக்கள் குறித்து பதிவுகளை மேற்கொள்ளத் தேவையான சட்ட நெறிப்படுத்தல்கள், பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தி நம்பிக்கை அளித்தல், மற்றும் தேவையான உளவள சமுகநல உதவிகளை வழங்குவதற்கான அமைப்புக்கள், தமிழர்களால் போதிய அளவில் செயற்படுத்தப்படாமல் இருப்பது ஒரு குறையாகத் தொடர்கிறது.

அதே வேளை பாதிப்புற்றவர்களோ, பாதிப்புற்றவர்களின் உறவினர்கள் நண்பர்கள் ஊரவர்களோ நாட்டின் உள்ளோ அல்லது வெளிநாடுகளிலோ வாழ்ந்தாலும், தங்களின் சாட்சியங்களைப் பதிவதில் அச்சத்தாலோ அக்கறையின்மையாலோ தவறுவதும் இன்னொரு குறைபாடாகத் தொடர்கிறது.

இந்த இரு குறைபாடுகளையும் எந்த அளவுக்கு வெற்றிகரமாகத் தீர்த்து வைக்க முடியும் என்பதில் உலகத் தமிழர்கள் ஒற்றுமையாக ஓரணியில் செயற்பட்டாலே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த சான்றாதாரப்படுத்தப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர்க்கான செயற்பாட்டுக் குழுவினரால் முழுமையாக்க முடியும்.

இவ்விடத்தில் ஐக்கிய நாடுகள் சபை 2010ம் ஆண்டுத் தீர்மானத்தின் மூலம் பிரகடனப்படுத்தி 2011ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 30ம் திகதியன்று கொண்டாடும் அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டதால் பாதிப்புற்றோர் நாளில் சில முக்கிய விடயங்களை ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருத்த விரும்புகிறது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்பதற்கான வரைவிலக்கணம் ஒன்றை எல்லா ஆட்களுக்குமான வலிந்து காணாமலாக்கப்படுதலில் இருந்து பாதுகாப்பதற்கான சாசனத்தின் அடிப்படையில் 18.12.1992 இல் ஐக்கிய நாடுகள் சபை வரைபு செய்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது “ ஒரு ஆள் அவருடைய விருப்பின்றி கைதுசெய்யப்பட்டோ அல்லது தடுத்து வைக்கப்பட்டோ அல்லது கடத்தப்பட்டோ அல்லது அவருடைய சுதந்திரம் அரசாங்கத்தாலோ அல்லது அரசாங்கத்தின் பலநிலைகளிலும் உள்ள வேறுவேறான அதிகாரிகளாலோ ஒடுக்கப்பட்டோ அல்லது திட்டமிட்ட குழுக்களாலோ அல்லது தனிப்பட்ட ஆட்களாலோ மறுக்கபட்டோ, அதற்கு அரசாங்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பு அல்லது விருப்பம் அல்லது ஒப்புதல் இருந்து, அதன் தொடர்ச்சியாக, அந்த ஆளுக்கு என்னவானது என்றோ அல்லது அவருடைய சுதந்திரம் ஏன் மறுக்கபட்டதென்றோ, அவரைச் சட்டத்தால் பாதுகாப்பதற்கு வெளியாக, வெளிப்படுத்த மறுப்பது” எனலாம். இலங்கையில் யுத்தம் முடிவுற்ற நிலையில் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தவர்களும் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர்களுமே வலிந்து காணாமலாக்கப்பட்டோரில் மிக மிக அதிகம் என்பதால் இந்தப் பிரச்சினை யுத்தத்தின் விளைவாகப் பார்க்கப்படாது அனைத்துலக சட்டங்களின் மீறலாகப் பார்க்கப்பட வேண்டியவொன்றாக உள்ளது.

இந்த வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது இன்று அரசியல் எதிர்க்கருத்துள்ளவர்களை இல்லாமல் செய்வதற்கான உத்தியாக உலகெங்கும் பரவலாகக் கையாளப்படும் நிலையில் இச்செயல் எவ்வளவு கொடுமையானது உடன் தடுக்கப்பட வேண்டியது என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை சில உதாரணங்களைத் தந்துள்ளது.

பாதிப்படைபவர்கள், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன் அவர் உயிர்வாழ்தலுக்கான தொடர்ச்சியான அச்சப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றார். அதே வேளை அவருடைய குடும்பத்தவர்க்கு தெரியப்படுத்தாத நிலையில் அவருக்கு உதவிக்கு யாரும் வரமுடியாத நிலை உருவாக்கப்படுகிறது. அவருக்கான சட்டப்பாதுகாப்பு எல்லை நீக்கப்பட்டு சமுகத்தில் இருந்து காணாமலாக்கப்படுகிறார். இது அவருடைய எல்லா உரிமைகளையுமே அழிக்கும். தன்னைப் பிடித்து வைத்திருப்பவரின் இரக்கத்திலேயே தங்கி வாழும் நிலையை உருவாக்கும்.
பாதிப்படைபவருக்கு இறுதியாக மரணமடைதல் என்பது மட்டும் இல்லாது, எல்லாவிதமான மனிதாபிமானமற்ற செயலுக்கும் அவர் உள்ளாக்கப்பட்டு உள உடல் வடுக்களை அடைய வைத்து மிகக் குரூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகுதல் மிகுதியாகி கொடுங்கனவாக அவர் எதிர்காலம் ஆக்கப்படுகிறது.
பாதிப்படைபவரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர் உயிருடன் உள்ளாரா இல்லையா? எங்கு உள்ளார், எத்தகைய சுகநிலையில் உள்ளார் போன்ற ஏக்கத்தால் மனஉளைச்சலை அனுபவிப்பார்கள். நம்பிக்கைக்கும் ஏமாற்றத்திற்கும், அலைச்சல்களுக்கும் காத்திருப்புக்களுக்கும், உள்ளாகி பல ஆண்டுகள் எந்தச் செய்தியையும் தெரிந்து கொள்ள இயலாத நிலையில் தவிப்பார்கள். உண்மையைத் தேடும் தங்களையும் வெருட்டி இதே கதியை ஏற்படுத்திடுவரென அஞ்சுவார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் துன்பங்கள பெரும்பாலும் பொருளாதாரநிலையுடனும் தொடர்புடையதாகிறது. பாதிப்புற்றவரே குடும்பத்தின் ஒரே உழைப்பாளராக இருந்தால் ஏற்படும் உணர்ச்சி மேலீடு உலகியல் வாழ்வையே வெறுக்கச் செய்து விடும். இதனை பாதிப்புற்றவரைத் தேட எடுக்கும் செலவுகள் மேலும் அதிகரிக்கும். இதனால் வாழ்வதற்கான நம்பிக்கையுடன் புதிய சூழலை உருவாக்கி வாழும் தன்மையையே இழந்து விடுவர். அதிலும் மரணச்சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் நிதிஉதவிகள் எதனையும் பெற இயலாதவர்களாகப் பொருளாதார சமுக விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவர். இதில் பெண்களே நேரடியாகப் பாதிப்படைபவர்களாக இருப்பதால் அவர்கள் மிரட்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் உள்ளாகின்றார்கள். பாதிப்படைந்தவர் பெண்ணாக இருந்தாலோ அவர் பாலியல் துன்புறத்தல்கள் உட்பட்ட பலவிதமான துன்புறுத்தல்களை எதிர்க்க இயலாதவராகி விடுகின்றார். பிள்ளைகளைப் பொறுத்த மட்டில் பெற்றோரின் பிரிவு அல்லது இழப்பு என்பது அவர்களை எல்லாநிலைகளிலும் மிகக் கடுமையாகப் பாதிக்கும்.

இந்த உதாரணங்கள் வலிந்து காணாமலாக்கப்படுதலில் ஏன் உடன் தண்டனை நீதி முக்கியம், பரிகார நீதி அவசியம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த நிலையை உடன்பிறப்புக்கள் அனுபவிக்கையில் இந்தப் பிரச்சினையை அரசியலாகப் பார்க்காது, கட்சி பேதங்களை மறந்து, ஒவ்வொரு தமிழரும் தங்கள் குடும்ப உறுப்பினரகளில்; ஒருவராகப் பாதிப்படைந்தவர்களைக் கருதி தொடர்ச்சியான சனநாயகப் போராட்டங்களின் வழி, ராஜதந்திர அணுகுமுறைகளின் வழி, ஊடகப் பரப்புரைகளின் வழி, பாதிப்புற்ற மக்களுடைய மனிதாபிமானப் பிரச்சினையாக இதனை உலகின் முன் வைக்க வேண்டும். சிங்களவர்கள், முஸ்லீம்கள், மலையக மக்கள் கூட இந்தப்பிரச்சினையை அவர்கள் வாழும் தீவின் பிரச்சினை என்ற வகையில் அணுகத் தவறினால் நாளை அவர்களுக்கும் இதுவே வாழ்வாகும் என்கிற அபாயநிலை உள்ளது. எனவே மனிதாபிமானமுள்ள இலங்கைத் தீவின் மக்கள் அனைவரும் இவ்விடயத்தில் ஒன்றிணைந்து உண்மைகளை உலகின் முன் வைக்க வேண்டிய தேவை உள்ளது.

மேலும் வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது ஒரு தனியாளை அச்சப்படுத்தும் செயல்ல. அவர் சார்ந்த சமுகத்தையே அச்சப்படுத்திச் சுதந்திரமாக இயங்க விடாது தடுக்கின்ற, சமுகத்திற்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடு. எனவே உலக மக்கள் அனைவரும் வலிந்து காணாமலாக்கப்படுவோருக்கான நீதி எந்த நாட்டில் கேட்கப்பட்டாலும் அதில் இணைந்து நீதியை நிலைநாட்ட உழைத்தாலே உலகின் பாதுகாப்பான அமைதி பேணப்படும்.

– சட்டத்தின் முன் ஆளாக மதிக்கப்படும் உரிமை,

– ஒரு ஆளின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்குமான உரிமை,

சித்திரவதைகள், கொடுமைப்படுததல்;கள், மனிதாபிமானமற்றமுறையில் நடத்தப்படுதல் என்பவற்றில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை,
வலிந்து காணாமலாக்கப்பட்டவர் கொல்லப்பட்டால் உயிர் வாழ்தலுக்கான உரிமை,

அடையாளத்தைப் பேணுவதற்கான உரிமை,

நியாயமான முறையில் வழக்காடி நீதியைப் பெறுதலை உறுதிப்படுத்தும் உரிமை,

புனர்வாழ்வையும், நட்டஈடுகளையும் பெறுவதற்கான உரிமை,

– காணாமல்போனமை குறித்த உண்மையை அறியும் உரிமை,

குடும்பத்தைப் பாதுகாப்பதற்கும் குடும்பத்துக்கு உதவுவதற்குமான உரிமை,
போதுமான தரத்துடன் வாழ்வதற்கான உரிமை,

உடல்நலத்துடன் வாழ்வதற்கான உரிமை, கல்விக்கான உரிமை,

என அனைத்து சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக அடிப்படை உரிமைகளும் வலிந்து காhணமலாக்கப்படுவதால் ஒன்றாக இழக்கப்படுவதாலேயே அனைத்துலக மனித உரிமைகள் நாள் இருக்கத்தக்கதாக அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டதால் பாதிப்புற்றோர் நாளும் தனியான ஒரு அனைத்துலக நாளாக 2010ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்தால் கட்டமைக்கப்பட்டது.

இதனை உணர்கின்ற பொழுது உலகத் தமிழினம் தன்னினத்தின் ஒரு பகுதி மக்கள் இலங்கையில் 13 ஆண்டுகளாக நடாத்துகின்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீதிக்கான போராட்டத்தை அவர்களுக்கான நீதி கிடைக்கக் கூடிய முறையில் உலகளாவிய நிலையில் உடன் முன்னெடுக்க வேண்டியதன் தேவை தெளிவாகிறது.

ஓரே உலகத் தமிழினமாகச் சனநாயக வழியில் இணைவோம். தங்களுடைய மனிதாபிமானப் பிரச்சினைக்கு இதுவரை எந்தத் தீர்வையும் முன்வைக்காது, யுத்தத்தின் விளைவென மரணச்சான்றிதழை வலுக்கட்டாயமாகத் திணித்து நீதியைச் சாகடிப்பதால், நீதிக்காகச் செத்து மடிந்து கொண்டிருக்கும், ஈழத்து வலிந்து காணாமலாக்கப்பட்டதால் பாதிப்புற்றுள்ளவர்களின் உலகக் குரலாக மாறுவோம். இது அன்னைத் தமிழுக்கு மட்டுமல்ல மனிதாயத்திற்கும் நாம் செய்ய வேண்டிய இன்றையக் கடமையாக நம்முன்னுள்ளது.