தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் போராளியொருவர் ஆரம்பித்துள்ளார். இன்று (9) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு சந்தியில், இலங்கை வங்கி கட்டிடத்திற்கு அண்மையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமக்கிடையிலான ஆசன பங்கீட்டு பிரச்சினைகளை கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்காக ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சாகும் வரையான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த நபர், இதுவரை நீராகாரமும் அருந்தாமல் போராட்டத்தை தொடர்கிறார். முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த, முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேயர் என்பவரே போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தனது தந்தை நாட்டுப்பற்றாளர் கௌரவமளிக்கப்பட்டவர் என்றும், 3 உடன்பிறப்புக்கள் மாவீரர்களாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.