கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிறுவனத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்திற்குள் பூதாகரமாக வெடித்திருக்கும் பிரச்சனையை அடுத்து அரசாங்கத்திலுள்ள பங்காளிக் கட்சிகளின் 10 தலைவர்கள் 05ஆம் திகதி மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
கொழும்பில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.
இதன்படி ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார , தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, தூய ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர , லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி அசங்க நவரத்ன, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த குழு அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து யுகதனவி மின் நிலைய பிரச்சனை பற்றி கலந்துரையாடியபோதிலும் சாதகமான உடன்பாட்டை எட்ட முடியவில்லை.
இதனையடுத்து இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து இது குறித்து கலந்துரையாட முடிவு செய்தனர், ஆனால் கடந்த வார இறுதி வரை அமெரிக்கா சென்ற ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பாததால், அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலைக் கோருவதற்காக தயாரிக்கப்பட்ட கடிதம் இன்னும் அனுப்பப்படவில்லை, முன்னதாக தயாரிக்கப்பட்ட கடிதம் திருத்தப்பட்டு நாளை மறுநாள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்று ஒரு பங்காளிக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.