அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் – அமெரிக்க தூதுவர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஆகியோருடன் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியிருந்தார்.குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, அரசியல் தீர்வு விடயங்கள், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் வகிபாகம், அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்கள் குறித்தே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டுள்ளது.அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பரில் கொண்டுவரும் விரிவான அறிக்கையை அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தேனும் இலக்குகளை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சம்பந்தன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் கேட்டுக்கொண்டார்.அத்துடன் சர்வதேச நாடுகளின் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் எனவே அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் கூடுதல் அழுத்தம் இருக்கவேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.(15)