பா.உ ஜனாவின் நிதி ஒதுக்கீட்டில் அமைப்புகள், கழகங்களுக்குஉபகரணங்கள் வழங்கிவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்( ஜனா) அவர்களின் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைப்புகள் மற்றும் கழகங்கள் சிலவற்றுக்கான தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

கோரளைப்பற்று வாழைச்சேனை, மண்முனை மேற்கு வவுணதீவு, மண்முனைப் பற்று ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் இயங்கும் அமைப்புகள், கழகங்களுக்கான உபகரணங்களே இன்று வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களிடம் மேற்படி கழகங்களால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உரிய பிரதேச செயலங்களினூடாக உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டது. இருப்பினும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள், அரசியல் குழப்பங்கள் போன்றவற்றின் காரணமாக உபகரணங்கள் கையளிக்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து தற்போது அவை உரிய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்றைய தினம் மேற்குறிப்பிட்ட மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழுள்ள அமைப்புகளுக்கு தளபாடங்கள், உபகரணங்கள் கையளிப்பட்டது.

இந்நிகழ்வில்  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் வேணு ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.