அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாகம் : 7 மணி நேர மின்வெட்டு!

அரசாங்கத்தின் சீரற்ற முகாமைத்துவத்தால் தற்போது 7 மணி நேர வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

ஒரு மணி நேரமாக ஆரம்பித்த மின்வெட்டு இன்று 7 மணி நேரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணையை கீழே காணலாம்.

இந்த மின்வெட்டினால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக சிறு வியாபாரங்களை முன்னெடுப்போர் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளிர்சாதனப் பெட்டிகளை வைத்திருக்கும் வியாபாரிகளும், குளிர்சாதன களஞ்சியசாலையை நடத்துவோரும் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னர் இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் போது மின்பிறப்பாக்கிகளை வைத்திருக்கும் வியாபாரிகள், உற்பத்தி நிறுவனங்களை அவற்றை இயக்கி தமது பணிகளை முன்னெடுத்து வந்தன.

எனினும், தற்போது டீசல் நெருக்கடியினால் மின்பிறப்பாக்கிகளைக்கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீரேந்து பிரதேசங்களில் மழைவீழ்ச்சி இல்லாததால் நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு போதுமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாததால், நீர் மின் உற்பத்தியும் பொய்த்துப் போயுள்ளது.

எனவே, எரிபொருள் மூலம் மின் உற்பத்தியை நம்பியிருக்க வேண்டிய நிலையில், டொலருக்கான தட்டுப்பாடு எரிபொருளைக் கொள்வனவு செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக டீசல் பற்றாக்குறையினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதேவேளை, தற்போது டீசல் பற்றாக்குறையால் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 50 வீதமான பேருந்து சேவைகளே சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டீசல் பற்றாக்குறையால் மரக்கறி விநியோகத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விளை பொருட்களை சந்தைகளுக்குக் கொண்டுவர முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு டீசல் நெருக்கடியும் டொலர் நெருக்கடியும் இலங்கை மக்களின் கழுத்தை நாளுக்கு நாள் நெருக்கி வருகிறது,

எரிபொருள் கப்பல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் எரிபொருள் கிடைத்துவிடும் என்று கூறினாலும் கூட, கையிருப்பில் டொலர்கள் இல்லாததால் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசலை விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் குறைந்த நுகர்வை மேற்கொள்வர் என்பதுடன் இந்த நெருக்கடியை சில வாரங்களுக்கு சமாளிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் இவ்வாறு நடந்துகொள்வதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், திறனற்ற முகாமைத்துவமே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் செலுத்திய 500 மில்லியன் டொலர் கடன் தொகையை செலுத்துவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி காலம் எடுத்திருந்தால் இந்த நெருக்கடி இவ்வளவு மோசமாகியிருக்காது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள், தலைமைகள் இடையிலான சண்டைகளும், அதிகாரப் போட்டியுமே இந்த நிலை இவ்வளவு மோசமாவதற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதிகாரப் போட்டியும், திறனற்ற நிர்வாகமும் இன்று மக்களை பெரும் துயரத்தில் தள்ளியுள்ளது. இந்த நிலை நீடிக்குமானால் எப்போது பொருளாதாரம் அதளபாதத்தில் உடைந்து விழுவதை தவிர்க்க முடியாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நிலைமை இவ்வாறு நீடித்தால் அடுத்த சில நாட்களில் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மிக அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்து, தமது குடும்ப, பிரத்தியேக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.