அரசாங்கத்தின் புனர்வாழ்வு சட்டமூலம் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் புனர்வாழ்வு முகாம்களில் பொதுமக்களை தடுத்துவைப்பதற்கான பரந்துபட்ட அதிகாரத்தை வழங்கும் நகல்சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் விலக்கிக்கொள்ளவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது
இலங்கை பாராளுமன்றத்திற்கு செப்டம்பர் 23 ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலம் போதைப்பொருள் பாவனையாளர்கள் முன்னாள் போராளிகள் வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் ஏனைய குழுக்களை சேர்ந்தவர்களை கட்டாயமாக புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைப்பதற்கு அனுமதிக்கும்.
பாதுகாப்பு அமைச்சினால் கட்டு;ப்படுத்தப்படும் பாதுகாப்பு தரப்பினர் பணிபுரியும் புனர்வாழ்வு பணியகங்களிற்கான புதிய நிர்வாக கட்டமைப்பை புனர்வாழ்வு பணியக சட்டமூலம் உருவாக்கும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சவால்விடுத்துள்ள உத்தேச சட்டம் புனர்வாழ்விற்கு அனுப்புவதற்கான அடிப்படையை விபரிக்கவில்லை எனினும் ஏனைய அரசாங்க கொள்கைகள் எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டணை வழங்கப்படாத மக்களை வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு செய்வதற்கான தெளிவற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்களை கொண்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட புனர்வாழ்வு முயற்சிகள் குற்றம்சாட்டப்படாமல் தடுப்புக்காவலில் வைப்பதற்கான துஸ்பிரயோக நடவடிக்கையாக தோன்றுகின்றதே தவிர வேறொன்றுமில்லை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.