அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் சந்திப்பு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் உள்ள 11 பங்காளி கட்சி தலைவர்கள் ஒன்றினைந்து நேற்றைய தினம் ‘முழு நாடும் சரியான பாதையில் ‘ என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய கொள்கை திட்டத்தை வெளியிட்டனர்.

பங்காளி கட்சிகளின் தேசிய மாநாடு நேற்று கொழும்பில் சர்வமத வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

இம்மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, லங்காசமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுலா,ஸ்ரீ லங்கா மஹாஜன கட்சிpயின் தலைவர் காமினி வீரசிங்க,யுதுகம தேசிய அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க,விஜயதரனி தேசிய சபையின் தலைவர் அதுரலியே ரத்ன தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர,லசந்த அழகியவன்ன ,நிமல் சிறிபாலடி சில்வா,துமிந்த திஸாநாயக்க ,பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ,ரஞ்சித் சியம்பலாபிடிய ஆகியோரும், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சில பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும், சிவில் அமைப்பினர்,இடதுசாரிகட்சியினர்,தொழிற்சங்கத்தின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நிகழ்வில் வரவேற்புரையாற்றி மாநாட்டின் நோக்கத்தை தெளிவுப்படுத்தினார்.அதனை தொடர்ந்து பங்காளி கட்சி தலைவர்கள் ‘முழு நாடும் சரியான பாதையில்’ தேசிய கொள்கை திட்ட கையேட்டை மத தலைவர்களுக்கும்,சிவில் அமைப்பினருக்கு வழங்கிவைத்தார்கள்.

நாடு எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பங்காள கட்சிகள் ஒன்றினைந்து 10 குறுகிய மற்றும் நீண்டகால கொள்கை திட்டங்களை ‘முழு நாடும் சரியான பாதையில்’என்ற தொனிப்பொருளின் கீழ் வெளியிட்டனர்.

வெளிநாட்டு கையிருப்பினை மேம்படுத்திக் கொள்வதற்காக ஏற்றுமதி சேவை துறையினை துரிதப்படுத்துவதுடன்,அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டிக் கொள்வதும் அவசியமாகும் அத்துடன் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த சுற்றுலாத்துறை கொள்கை திருத்தியமைக்கப்பட வேண்டும்.

மின்சாரத்துறை எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு குறுகிய மற்றும் நீண்டகால கொள்கை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டங்கள் வகுத்தல் அவசியமாகும்.புதுப்பிக்கத்தக்க சக்த வள கொள்கையை அடைய சிறந்த பொறிமுறை அனைத்து அமைச்சுகள் ஊடாகவும் செயற்படுத்தப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும்,தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் மத அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பது அவசியமாகும்.

நாட்டின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயத்துறையை மீள்கட்டியெழுப்ப வேண்டுமாயின் நிவாரண அடிப்படையில் விவசாயிகளுக்கு உரம் வழங்குவது குறுகிய கால முக்கிய யோசனையாகும்.வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக காத்திருப்பதை காட்டிலும் தெரிவு செய்யப்பட்ட தேசிய முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்க சிறந்த திட்டத்தை வகுப்பது அவசியமாகும்.

அத்துடன் தேசிய உற்பத்திகளுக்கும்,இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது அவசியமாகும். உள்ளிட்ட பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 10 யோசனைகளை பங்காளி கட்சியினர முன்வைத்துள்ளனர்.முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அரசாங்கம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம் என பங்காளி கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டனர்.