அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றிணையாவிட்டால் மக்களின் பிரச்சினை தீரப் போவதில்லை-எம்.எஸ்.எஸ். அமீர் அலி

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றிணையாவிட்டால் ஜனாதிபதியோ, அரசாங்கமோ பதவி விலகப்போவதுமில்லை. மக்களின் பிரச்சினை தீரப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று அவர் (14) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்று விட்டிருக்கும் நிலையிலும்,மக்கள் வாழ்க்கை செலவுகளை தாங்க முடியாமல் வரலாறு காணாத போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கும் நிலையிலும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதை பார்க்கிலும் தங்களது கட்சி அரசியலையும் தமக்கான செல்வாக்கையும் வளர்த்துக் கொள்ளவே ஒவ்வொரு அரசியல் இயக்கமும் முன்டியடித்துக் கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளமை கவலையளிக்கிறது.

ஒட்டு மொத்த நாடும் கொழும்பு காலிமுகத்திடலிலே ஒன்று கூடி அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோருகின்ற போதும் இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி என்றும் இன்னும் 69 இலட்சம் மக்களும் எம்மோடுதான் உள்ளனர் என்றும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் மார்தட்டுகின்றனர்,எதிர்க்கட்சிகளும் மக்களின் குறை தீர்க்க இந்த நேரத்திலும் கூட ஒன்றிணைய முடியாமல் தனித்தனியாகவே காரியமாற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் எதிர் வரும் நாட்களில் சிற்சில சலுகைகளை மக்களுக்கு அறிவிப்பதனூடாக மக்களின் போராட்டங்களை பிசுபிசுத்துப் போகச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மக்களின் போராட்டங்களை வலுவிழக்கச் செய்யப்படுவதனூடாக மீண்டும் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள ஆளும் தரப்பு காய்நகர்த்திக் கொண்டிருப்பதால் ஜனாதிபதியோ,அரசாங்கமோ பதவி விலகப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.

இந்நிலையில் அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்களுக்கிடையே உள்ள கொள்கை வேறுபாடுகளை தவிர்த்து மக்களையும் ஒன்றிணைத்து இப் போராட்டத்தை ஒன்றாக முன்னெடுப்பதனூடாகவே இந்த தோல்வியடைந்த அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பவும், மக்களுக்கு நிவாரணமளிக்கவும் முடியும் என்றும் மேலும் கூறினார்.