அரசாங்கத்தை வீடு நெருங்கி வருகிறது – ரவூப் ஹக்கீம்

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் காணப்படுகின்ற இந்த  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற காலம் நெருங்கி வருகின்றது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் என்ன பொருளாதார கொள்கையினை அரசாங்கம் கடைபிடித்தாலும் அவர்களின் அண்மைக்கால நகர்வுகள் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வினை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கைமீறிவிட்டது என்றும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(07) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.ரி.ஆர். அமைப்பின் தலைவர் ஹாதீக் இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வை, சம்மாந்துறை  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.ரி.ஆர். அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நாட்டில் இன்று விவசாயிகள், ஆசிரியர்கள், மின்சார சபை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கள்  என தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பொருட்களின் விலைகளில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் கிடையாது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானியும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஏனெனில் அரசாங்கத்தினால் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

எனவே, அரசாங்கத்தின் அனைத்து வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்து, பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் காணப்படுகின்ற இந்த  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற காலம் நெருக்கி வருகின்றது. என்றார்.