அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறுவதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்துவைத்துள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் விதத்தில் சில அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஐலண்ட் நாளிதழிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எவரையும் பலவந்தமாக வைத்திருக்கவில்லை, என தெரிவித்துள்ள பிரதமர் அரசியல்கூட்டணியொன்றில் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுவது வழமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய அரசியலில் உள்ள வேறுபலர் போல இல்லாமல், நாங்கள் உள்ளக ஜனநாயகத்தை பேணுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் உள்ள எவரும் வெளியேறலாம், மக்களின் நம்பிக்கை எங்கள் மீது உள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி நாங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றோம், அதற்காகவே மக்கள் எங்களிற்கு பெரும் ஆணையை வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல்வாதிகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கின்றனர் அதனை பெரிதுபடுத்தக்கூடாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கத்தை நாங்கள் முன்னெடுக்கும் விதம் குறித்து எவராவது உண்மையிலேயே அதிருப்தியடைந்திருந்தால் அவர்கள் வெளியேறுவதற்காக எங்கள் கதவுகள் எப்போதும் அகலத்திறந்திருக்கின்றன அதேபோன்று நாங்கள் ஆட்சி செய்யும் விதம் பொருத்தமானது என கருதி எவராவது எங்களுடன் இணைய விரும்பினால் எங்கள் கதவுகள் அவர்களிற்காகவும் திறந்திருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.