அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

எரிபொருள் விலையேற்றம் மூலம் ஏழை மக்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்பினை சந்திப்பதுடன் அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது பல்வேறு விடையங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இதன் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரி பொருட்களின் விலையேற்றம்.

தற்போதைய அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் சூழ் நிலையில் காணப்படுகின்றது.

அதற்கான முதல் படி எரி பொருட்களின் விலையேற்றம். மிகவும் மோசமான ஒரு சூழல் இந்த நாட்டில் இருக்கின்ற நிலையில் எரிபொருளை வறிய மக்கள் பயண்படுத்துகின்ற மண்னெண்னை 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்கள் கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் அன்றாட கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் தன்னை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களும் முடக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வாறான ஒரு அபாயச் செய்தியான எரிபொருட்களின் விலையேற்றம் செய்யப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றோம்.

எரி பொருட்கள் மட்டும் இல்லை ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகரிப்புச் செய்யப்படுவதற்கான காரணமாகவும் உள்ளது. பாண் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

எனவே இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்திக்கின்ற அரசாங்கமாக செயல் படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அந்த வகையில் இலங்கை அரசாங்கம் உடனடியாக விலையேற்றங்களை குறைக்க வேண்டும். நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு நல்ல செய்தியை விலை குறைப்பின் ஊடாக சொல்ல வேண்டும்.

இல்லை என்றால் நான் கூறியது போல் இவ் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் என தெரிவித்தார்.

கப்பலை நாட்டிற்குள் கொண்டு வந்ததற்கான நியாயப்பாட்டை கூறும் அரசு.

மேலும் சனிக்கிழமை (12) பிரதமர் தலைமையில் கப்பல் தொடர்பாக ஒரு அவசர கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலை பார்க்கின்ற போது குறித்த கப்பலை நாட்டிற்குள் எடுத்ததிற்கான நியாயப்பாட்டினை தெரிவிக்கின்ற வகையிலே குறித்த கூட்டம் அமைந்துள்ளது.

ஆனால் கப்பல் உள்ளே எடுக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் மற்றும் மீனவ சமூகம்.

மீனவ சமூகம் பாரிய பின்னடைவை சந்திக்கப் போகின்றார்கள் என்பது உண்மை. மன்னார் வளை குடாவில் கூட கப்பலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதன் ஊடாக பாரிய பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியாது. எங்களுடைய மீனவ சமூகம் தங்களிடம் பிடிபடுகின்ற மீனை சர்வதேச ரீதியாக அனுப்பப்படுகின்ற போது சர்வதேசம் எமது மீனவர்களின் மீன்களை கொள்வனவு செய்வார்களா? என்கின்ற அச்சத்தோடு, இருக்கின்றார்கள்.

ஆகவே இலங்கையில் பிடிக்கப்படுகின்ற மீன் வகைகள் சர்வதேச ரீதியாக ஏற்றுமதி செய்யப்படுகின்ற போது அவை திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை ஏற்படுமா? ஏன்ற நிலையில் எமது மீனவ சமூகம் ஒரு அச்சத்துடன் இருக்கின்றது.

விலை உயர்ந்த மீன் வகைகளை அவர்கள் நல்ல விலைக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்வடைகின்ற நிலையினை அவர்கள் எதிர் பார்த்துள்ளனர்.

யார் எதனை கூறினாலும் பாதிக்கப்படுவது எமது மீனவ சமூகம். அவர்களுடைய அன்றாட பிரச்சினை மிக மோசமான ஒரு சூழலை ஏற்படுத்தும். கப்பல் தொடர்பில் நியாயப்படுத்துகின்ற விடையங்கள் தவிர்க்கப்பட வேண்டும். உள்ளதைச் சொல்லுங்கள்.

எங்களுடைய மக்களையும், மீனவச் சமூகத்தையும் காப்பாற்றுகின்ற அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

நிதியை பெற்றுக் கொள்ளவே கப்பலை உள்ளே எடுத்ததாக வாசுதேவ நாணயக்கர தெரிவித்துள்ளார். அரசாங்கம் பல தடவைகள் பணம் சம்பாதிக்கின்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எமது மக்களை பலிக்காடாக்குகின்ற நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்ட பயணத்தை வெற்றியளிக்குமா?

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பயணத்தடையானது நாட்டில் இருந்து கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நாடு முழுமையாக முடக்கப்பட்டது.

ஆனால் நாடு முடக்கப்பட்டமைக்கான நோக்கம் வெற்றி பெற்றதாக இல்லை. காரணம் தொற்றாளர்களினதும், மரணிப்பவர்களினதும் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே இந்த நாட்டை முடக்குகின்ற நிலமை தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள்.

வைரஸின் தாக்கம் கூடிக் கொண்டிருக்கின்றது.இதற்கு முதல் காரணம் என்ன என்றால் அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றால் முதலில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.

உலக நாடுகளும் அதனையே செய்கின்றது. ஆனால் நாட்டை முடக்கி விட்டு தடுப்பூசி வழங்க வில்லை என்றால் இறப்பு அதிகரிக்கும், தொற்றும் அதிகரிக்கும். எனவே இவற்றை தடுக்க வேண்டும் என்றால் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும்.

வன்னி மாவட்டத்தில் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான உரிய வழி முறைகளை அரசு கண்டு கொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்தில் அதிக அளவில் தொற்றாளர்கள் உள்ளனர். அங்கே தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

வன்னி மாவட்டம் குறிப்பாக முல்லைத்தீவிலும் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடைத் தொழிற்சாலையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆடைத் தொழிற் சாலையினாலேயே கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கின்றது.

மேலும் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை அரச செலவில் மேற்கொள்ளப்படுவதாக அறிகின்றோம். அவ்வாறு செய்யாமல் அரசினால் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர்.பரிசோதனை சமூகத்திலும், மக்கள் மத்தியிலும் முழுமையாக சென்றடைய வேண்டும்.

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித்து செயல்படுமா ரெலோ?

கூட்டடைப்பில் இருந்து ரெலோ வெளியேறி தனித்து செயல்படாது.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(TNA)  உருவாக்கம் பெறுவதற்கான முயற்சிகளை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மேற்கொண்டது.

கூட்டமைப்பிற்குள் சில பிரச்சினைகள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

தமிழ் தேசியக்கூட்டமையில் இருந்து தமிழ் ஈழ விடுதலை  இயக்கம் ரெலோ வெளியில் வந்து செயல் படுவதற்கான எண்ணம் தற்போது வரை இல்லை. சில பிரச்சினைகள் உள்ளது. அதனை தெரியப்படுத்தி உள்ளோம். உள்ளே இருந்து கொண்டு செயல் படுவோம்.

ஆனால் தற்போதைய கால சூழ்நிலையில் வெளியில் வந்து செயற்படும் நிலை ஏற்படாது என்றார்.

மக்களை நேசிக்கின்ற கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றோம்.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.