அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே வெவ்வேறு நிலைப்பாடுகள்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, 21ஆவது திருத்தம் தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினரின் யோசனைகள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்கள் என்பவற்றை உள்ளடக்கி 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு கூட்டத்தை ஜனாதிபதி நாளை(30) கூட்டவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நாளை(30) மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 21ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான தமது கட்சியின் யோசனைகளை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உபுல் ஜயசூரிய, ஶ்ரீநாத் பெரேரா மற்றும் திசத் விஜேகுணவர்தன உள்ளிட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எனவே, இந்த திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தமது கட்சியால் இணங்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 21ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு முன்வைக்கப்படும் சட்டமூலத்திற்கு கட்சியின் ஆதரவை வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தயாரிக்கப்படவுள்ள புதிய வரைவுக்கான முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கு தமது கட்சி எதிர்பார்ப்பதாக அதன் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமது கட்சி பங்கேற்காது எனவும் அவர் கூறியுள்ளார்.