அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழ்சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளைப் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிலைவரத்தை மேம்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாடுகள், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி இலங்கையின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகக்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் விசனம் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் வெள்ளிக்கிழமை (4) இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் ஆரம்பத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை வெளியிடப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றின.

அதன்பிரகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் 46/1 என்ற புதிய தீர்மானத்தை முன்மொழிந்த பிரிட்டன், கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் சார்பில் மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் சர்வதேச தூதுவர் ரீட்டா ஃபிரென்ச் உரையாற்றினார்.

இணையனுசரணை நாடுகளின் சார்பில் இலங்கை குறித்து அவர் பேரவையில் முன்வைத்த விடயங்கள் வருமாறு:

முக்கிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்காக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

இருப்பினும் மனித உரிமைகள் பேரவையில் 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்டளவிலான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முதற்கட்டமாக காணாமல்போனோரின் பெயர்கள் உள்ளடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டதன் பின்னர், அவை தொடர்பிலான விசாரணைகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றமை விசனத்திற்குரிய விடயமாகும்.

சிவில் சமூக அமைப்பினர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், தடுத்துவைப்புக்கள் குறித்த எமது கரிசனைகள் இப்போதும் தொடர்கின்றன. சிவில் சமூக இடைவெளி பரந்த அடிப்படையில் பேணப்படுவது இன்றியமையாததாகும்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக மாற்றியமைப்பதன் முதற்கட்ட நடவடிக்கையாக, அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

எனினும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டளவிலானதாகக் காணப்படுவதுடன் அச்சட்டம் குறித்த எமது கரிசனை தொடர்கின்றது.

அதேபோன்று ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி, து இலங்கையின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகக்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எனவே அந்தச் செயலணியின் செயற்பாடுகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பாரபட்சமற்ற முறையில் அமைவதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்துகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும் அதேவேளை, 46ஃ1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை தொடர்பில் பேரவையின் உரையாற்றிய ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்திரா மணி பாண்டே கூறியதாவது,

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை குறித்த வாய்மூல மற்றும் எழுத்துமூல அறிக்கை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இலங்கையின் அயல் மற்றும் நட்புறவு நாடு என்ற அடிப்படையில், இலங்கைவாழ் தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதுடன் தொடர்புடைய கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான தமிழர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்வதென்பது இலங்கையின் சொந்த நலனுக்குரியது என்றே நாங்கள் நம்புகின்றோம். அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவது தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடும் இதிலடங்கும்.

மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் நல்லிணக்கம் உள்ளடங்கலாக பல்வேறு கோணங்களில் சர்வதேச சமூகப்பிரநிதிகளுடனும் சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்புக்களுடன் இலங்கை அரசாங்கம் தொடர்புகளைப்பேணிவருவது குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட தரப்பினரும் அவ்வாறான தொடர்புகள் பேணப்படுவதையும் அர்த்தமுள்ளதும் செயற்திறன்வாய்ந்ததுமான இருதரப்புக் கலந்துரையாடல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையும் நாம் விரும்புகின்றோம்.

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தை மேம்படுத்துவது குறித்த முக்கிய கரிசனைகளை உயர்ஸ்தானிகரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நல்லிணக்கப்பொறிமுறையை முன்னெடுத்துச்செல்வதுடன் பொதுமக்களின் அடிப்படைச்சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழ்சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளைப் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை அதிகாரப்பகிர்வு விடயம் குறித்து தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை மனதிலிருத்தி, மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.