தியாகி திலீபனின் தியாக வாரம் ஆரம்பித்திருக்கின்ற இவ்வேளையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 3 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் இளைஞர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக விடுதலை அல்லது பிணை வேண்டுமென உண்ணாவிர போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி வரும் நிலையில், இன்று அவர்களை சந்தித்த வடமாகாண ஆளுநர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் உண்ணாவி ரதத்தை கைவிட்டிருக்கின்றனர்.
இவ்வாறான வாக்குறுதிகள் அரசியல்வாதிகளால் எத்தனையோ முறை அரசியல் கைதிகளுக்கு கொடுக்கப்பட்டும் இன்றுவரை அது நிறை வேற்றப்படவில்லை என்பதையும் ஆளுநர் நினைவில் கொள்ள வேண்டும்.
தியாகி திலீபனின் தமிழர் தாயகம் மீதான ஐந்து கோரிக்கைகளில், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. கடந்த 35 வருட காலமாக இக்கேரிக்கையை முன்னிலைப்படுத்தி தமிழ் சமூகம் பல் வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளது.
அரசியல் கைதிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியும் பேரினவாத ஆட்சியாளர்கள் இதுவரை அரசியல் கைதிகள் உள்ளனர் என ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
தமிழர்களின் அரசியல் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என காலாகாலமாக இழுத்தடிப்பு செய்வதை போன்று அரசியல் கைதிகளின் விடுதலையும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றது.
பதவி விலகி ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே “நாட்டில் அரசியல் பிரச்சினை என்று ஒன்று இல்லை. இருப்பது பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சனையே “என்று கூறியதோடு “சிறையில் உள்ளோர் பயங்கரவாதத் தடை சட்டத்தால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளே” என்றார். பேரினவாத அமைச்சர்களும் அரசாங்கமும் தொடர்ந்தும் அவ்வாறே கூறி வருவதை நாம் அனுபவரீதியாக அறிவோம்.
மேலும் பயங்கரவாத தடை சட்டம் ஒட்டுமொத்த தமிழர்களையும், தமிழர்களின் அரசியலையும் அழிப்பதற்காக கொண்டுவரப்பட்டு 42 ஆண்டுகளாகின்ற போதும் அதனை நீக்காது அதன் துணையோடு ஆட்சியாளர்கள் இன்றும் அச்சட்டத்தின் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனையே புவிசார் அரசியல் செய்யும் வல்லரசுகளும் விரும்புகின்றன.
தற்போது மிக நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளில் பெண் ஒருவர் உட்பட 46 பேர் விடுதலைக்காக ஏங்கி நிற்கின்றனர்.
இவர்களில் தண்டனை தீர்ப்பளிக்கபட்டவர்கள் 24 பேர். பத்து வழக்குகளில் வழக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் 22 பேர் உள்ளனர். அத் தோடு இருநூறு ஆண்டுகால சிறைத் தண்டனை பெற்ற ஒருவரும், மரண தண்டனை கைதிகள் மூவரும் உள்ளனர். மேலும் ஆயுள் கைதிகள் ஒன்பது பேரும் உள்ளனர். ஆகக் கூடுதலாக 26 வருட காலம் சிறை வாழ்வை அனுபவிப்போரும் உள்ளனர்.
தமிழ் இன விடுதலை செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது என்ற மனநிலையை உருவாக்கவும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தண்டனை கொடுக்கவுமே அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாதுள்ளனர்.
ஒட்டுமொத்த தமிழர்களையும் தமிழர் தேசத்தையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே போலி புலி புரளி உண்டாக்கியும் புலிகளின் மீளுருவாக்கம் என பலர் கைது செய்யப்பட்டுமுள்ளனர். இவர்களில் ஒரு சிலரை விடுவித்து விட்டு அரசியல் கைதிகளை விடுவித்தோம் என சர்வதேசத்தை ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் ஏமாற்றியுள்ளனர்.
ஐநா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் நாட்டின் ஜனாதிபதி “தலதா மாளிகை மீது குண்டு வைத்தவர்கள், அரசியல்வாதிகளை கொலை செய்ய முயற்சித்தவர்கள் தவிர ஏனையோரை விடுவிக்க நடவடி க்கை எடுக்கின்றோம்” எனக் கூறியிருக்கின் றார்.இது எந்த வகையில் சாத்தியமாகும்? ஒட்டுமொத்த அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
பயங்கரவாத சட்டத்தை பாதுகாக்கின்றவர்களும், சுதந்திரம் என அறிவி க்கப்பட்ட நாளிலிருந்து இன அழிப்பு செய்கின்றவர்களுமே பயங்கரவா திகள். அந்த வகையில் நாட்டை ஆட்சி செய்த அனைவருமே பயங்க ரவாதிகள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
நாட்டில் அரசியல் கைதிகள் உள்ளனர் என்பதை ஐநா மனித உரிமை பேரவை வெளிப்படுத்தி அரசியல் கைதிகளை கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டும். அதுவே தமி ழர்களின் அரசியல் தீர்வு காண ஆரம்ப புள்ளியாகவும் அமையும்.