மாகாண சபை தேர்தலுக்கான உத்தேச சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ஆளும் கூட்டணிக்குள் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பானது வெள்ளிக்கிழமை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்கு முன்னர் பெசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பொன்றுக்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார்.
தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தல் தொகுதியொன்றில் ஒரே கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உத்தேச புதிய சட்டமூல வரைபின் யோசனைக்கு ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் எல்லை நிர்ணய விவகாரம் குறித்தும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் கேள்வியெழுப்பினர்.
அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்த யோசனைக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளின் முக்கிய பகுதியாகவே புதிய தேர்தல் சட்டமூல விவகாரம் அமைந்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் மாகாண சபை தேர்தலை நடத்துவதனை தேர்தல் முறைமையை மையப்படுத்தி புதிய சட்டமூல வரைபை அமைச்சரவையில் சமர்பித்திருந்த நிலையில் அது குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த சட்ட மூல வரைபில் காணப்பட்ட ஒருசில யோசணைகளுக்கு ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அமைச்சரவை பத்திரத்தை வெளியிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. இதன் பின்னரே கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார். எவ்வாறாயினும் உத்தேச மாகாண சபை தேர்தல் தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறையில் நடாத்துவதற்கான பூர்வாங்கல் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில் மாகாண சபைகளுக்கான உறுப்பினர் தெரிவில் 70 வீதம் தொகுவாரி முறைமையிலும் 30 வீதம் விகிதாசார முறைமையிலும் தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகளை தீர்த்து அடுத்த தேர்தல்களுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் பெசில் ராஜபக்ஷ பொதுஜன கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களையும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் இறுதிக்கட்டமாக ஜனாதிபதியுடன் அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறும். எனவே தான் இதன் உறுதியான நிலைப்பாடு ஜனாதிபதியுடனான கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் தெரியவரும் என ஆளும் கட்சி உறுப்பினரொருவர் தெரிவித்தார். அத்துடன் குறித்த மாகாண சபை தேர்தலுக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இருவாரத்திற்குள் எல்லை நிர்ணயம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.