அரசுக்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டங்கள்

அரசாங்கம் மற்றும் தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(04) காலை முதல் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில பகுதிகளில் பிரதான வீதிகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் இன்று(04) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக முன்றலிலிருந்து பரமேஸ்வரா சந்திக்கு பேரணியாக சென்ற மாணவர்கள் அங்கிருந்து யாழ். நகருக்கு சென்றனர்.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று(04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொம்மாந்துறையிலிருந்து எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக நுழைவாயிலுக்கருகில் வீதியை மறித்து போராட்டத்தில ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி, மாத்தளை நகரிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பொகவந்தலாவை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பொகவந்தலாவை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதனிடையே, நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாகவும் இன்று(04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா – கண்டி பிரதான வீதியிலிருந்து பேரணியாக சென்ற மக்கள் தங்களின் எதிர்ப்பை வௌியிட்டனர்.

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று பண்டாரவளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது.

பிரதான வீதியை மறித்து இன்று(04) காலை முதல் பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பசறை நகரிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கண்டி – திகன நகரிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.