சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குத் துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்க முன்வரவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் (30) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
எமக்கான நீதி கிடைக்காத நிலையிலும் 12 வருடங்களாகத் தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். பெறுமதிமிக்க எமது உயிர்களைத் தொலைத்துவிட்டு நாம் வீதி வீதியாகப் போராடிக்கொண்டு சொல்லொணா துன்பங்களையும், அவலங்களையும் அனுபவித்து வருகின்றோம்.
வருடங்கள் மாத்திரமே கடந்து செல்கின்றது, எமக்கான நீதி மட்டும் கிடைக்கப்பெறவில்லை. போரிற்குப் பின்னர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகளையே நாம் கோரி நிற்கின்றோம். இழப்பீட்டையோ வாழ்வாதாரத்தையோ கேட்டு நாம் போராடவில்லை.
சர்வதேச சமூகம் எமக்கான நீதியினை வழங்காமல் இலங்கை அரசுக்குத் துணைபோகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது, எனவே நீங்கள் கண்மூடியிருக்காமல் எமது நிலை கருதி சாட்சிகளான நாங்கள் இருக்கும் போதே எமக்கான நீதி கிடைப்பதற்குரிய பொறி முறைகளை சர்வதேச சமூகம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, ஆணைக்குழுக்களும் வேண்டாம், விசாரணையும் வேண்டாம், பொய்யான அறிக்கையை வழங்கி சர்வதேசத்தையும் தமிழர்களையும் ஏமாற்றாதே, இனப்படு கொலையாளியைக் காப்பாற்ற நினைப்பவர்கள் தமிழின துரோகிகள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.