அரச தலைவர்கள் மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து உடன் பதவி விலக வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

நாட்டு மக்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களில் ஈடுப்படவில்லை.சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம் என பௌத்த தேர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை முற்றிலும் வெறுக்கத்தக்கது எனத் தெரிவித்த ஓமல்பே சோபித தேரர் , அரச தலைவர்கள் பௌத்த அறக்கொள்கையை முறையாக பின்பற்றுவார்களாயின் நாட்டு மக்களின் கருத்துக்கும், மக்களாணைக்கும் மதிப்பளித்து முழுமையாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றினைந்து கடந்த 8 நாட்களாக காலி முகத்திடலில் முன்னெடுத்து வரும் போராட்டத்தை முடக்க அரசாங்கம் பல்வேறு மாற்று வழிமுறைகளை முன்னெடுத்து வருகிறது.

மக்களின் ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகார முறையில் முடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும். நாட்டு மக்கள் மதத்தையோ, இனத்தையோ முன்னிலைப்படுத்தி போராட்டத்தின் ஈடுப்படவில்லை.

நாட்டின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி இனம், மதம் ஆகியவற்றை துறந்து ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள வேளையில் பௌத்த தேரர்கள் என குறிப்பிட்டுக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு சார்பாக செயற்படும் தரப்பினர்கள் கடந்த வாரம் கொழும்பில் ‘போலியான போராட்டங்களை நம்பி சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம்’ என குறிப்பிட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை முற்றிலும் வெறுக்கத்தக்கதாக காணப்படுவதுடன், அவர்களின் செயற்பாடு பௌத்த அறகொள்கைக்கும் முரணானதாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் நாட்டு மக்களுக்கு துளியளவும் நம்பிக்கையோ, விருப்பமோ கிடையாது. மக்களின் அதிருப்தியை பெற்றுக்கொண்டு சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என பௌத்த அறக்கொள்கை வலியுறுத்தியுள்ளது.

பௌத்த அறகொள்கையினை அரச தலைவர்கள் பின்பற்றுவார்களாயின் அவர்கள் எப்போதோ பதவி விலகியிருக்க வேண்டும்.

நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கும், மக்களாணைக்கும் மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.

ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கை பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் வகையில் பொதுத்தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்றார்.