மக்களின் கோரிக்கைக்கு அமைய அரச தலைவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் நேற்றையதினம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறியிருந்தார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முதலில் தனது பதவி விலகலை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், அதன் பின்னர் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பது எவ்வாறு என்பது தொடர்பில் விவாதிக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தல் நடத்தி, பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசை அமைக்கலாமெனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த மக்கள் விடுதலை முன்னணி, இடைக்கால அரசாங்கத்தில் இணையப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளது.