இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக அவசரகால சட்டத்தை பயன்படுத்துகின்றமைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான அதிகாரிகள் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இன்று வௌியிட்டுள்ள ஒன்றிணைந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறவழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் துன்பங்களை வௌிப்படுத்துவதை தடுப்பதற்கும் இலங்கையிலுள்ள அதிகாரிகளால் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி அவசரகால சட்டம் மீள அமுல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை விட்டு வௌியேறி பதவியை இராஜிநாமா செய்ததுடன், அதற்காக நாடு முழுவதும் பல மாதங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள மனித உரிமை தொடர்பாக செயற்படும் குழுவினர், தொடர்ந்து வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 17 ஜூலை 2022 அன்று போராடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பதற்காக அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அன்று முதல் இலங்கை பாராளுமன்றம் 2022 ஜூலை 27 ஆம் திகதி மேலும் ஒரு மாதத்திற்கு தற்போதைய அவசரகால சட்டத்தை நீடிக்கவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கவும் இராணுவத்திற்கு தேவையான அதிகாரங்களை வழங்கவும் தீர்மானித்ததாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அதிகாரம் இன்றி போராட்டக்காரர்ளைத் தடுத்து வைக்கவும் தனியார் சொத்துகளை சோதனை செய்யவும் இதன் மூலம் வழியேற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவசர கால சட்டம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை என மனித உரிமை தொடர்பாக செயற்படும் குழுவினரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் மீறப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழ் அவசரகால சட்டத்தை பயன்படுத்துகின்றமை தொடர்பிலான கரிசனையினையும் மனித உரிமை தொடர்பில் செயலாற்றும் குழுவினர் கருத்தில் கொண்டுள்ளனர்.
சிவில் செயற்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அமைதி வழி போராட்டப் பின்னணியில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக அவர்கள் குற்றவியல் பொறுப்புக்கூறலை எதிர்கொள்ளக்கூடாது எனவும் அவர்கள் அரசாங்கத்திற்கு தமது கரிசனையை வௌியிட்டுள்ளனர்.
அமைதியாக ஒன்று கூடுவதற்கும் சங்கங்களின் சுதந்திரத்திற்கான உரிமைகளுக்காகவும் செயற்படும் விசேட அறிக்கையாளர் கிளமென்ட் நியோல்டெசி வில்லே, வௌிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணர் அத்திய வாரிஸ்,
நீதி, சமத்துவம், இழப்பீடுகளை வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்தி மேம்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் பேபியன் செல்வியோலி, அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான விசேட அறிக்கையாளர் சாத் அல்பாராகி, ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான சர்வதேச திட்டத்தை ஊக்குவிப்பது தொடர்பான சுயாதீன விசேட நிபுணரான லிவிங்ஸ்டன் சேவன்யான் ஆகியோர் இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளனர்.
இதனைத் தவிர உணவு தொடர்பான உரிமைக்கான விசேட செய்தியாளர் மைக்கல் பெக்ரி, மிரியம் எஸ்டிராடோ கெஸ்டிலோ,
மும்பா மலீலா, எலீனா ஸ்டேனர்டே பிரியா கோபாலன், மத்தியூ கிளட், பிரான்சிஸ் கொக்கலிசே, கருத்துச் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் அய்ரின் கன்சா மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு நிலை தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லாலர் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.