பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி 2278/22 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.
ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் பெற்றோலிய தொழிற்துறைக்கான ஒழுங்குறுத்தல் நிறுவனம் என்ற வகையில் 7.3 மில்லியன் மின்சார நுகர்வோர்கள் மற்றும் 21 மில்லியனுக்கும் அதிகமான சிறு குழந்தை முதல் வயதான நோயாளிகள் வரையான மின்சார நுகர்வோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முதன்மை பொறுப்பும் பணியும் ஆகும்.
போதிய மின் விநியோகம் இல்லாத காரணத்தால் முன்னெடுக்கப்படும் தொடர் மின்வெட்டு தற்போதைய ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுமக்களிடையே அமைதியின்மையை அதிகரித்துள்ளது என எதிர்பார்க்கிறோம். நுகர்வோரின் நலன்களைப் பாதிக்கும் விடயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) பொறுப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை மேலும் மோசமடைய செய்வதால் அத்தகைய அவசர நிலையின் போது நுகர்வோர் மற்றும் பங்குதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்படும் என்பதால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
எமது இந்த ஆலோசனைகள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.