நாட்டின் மொத்த சனத்தொகையில் குறைந்தபட்சம் 5.7 மில்லியன் மக்கள் (சனத்தொகையில் 26 சதவீதமானோர்) மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக செஞ்சிலுவை மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டிணைவு தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், கட்டமைப்பு ரீதியிலும் சேவை வழங்கலிலும் ஏற்பட்டிருக்கும் சீர்குலைவை சீரமைப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் மேற்குறிப்பிட்ட தொகை மேலும் அதிகரிக்கும் என்றும், அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் மேலும் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது. இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் தீவிர பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே செஞ்சிலுவை மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டிணைவு மேற்குறிப்பிட்டாறு எச்சரித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையானது நாடளாவிய ரீதியில் 11 மாவட்டங்களைச்சேர்ந்த 2,871 குடும்பங்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட நேர்காணல்கள், நுவரெலியா மாவட்டத்தில் 10 கிராமங்களிலுள்ள 300 குடும்பங்களிடம் பிரத்யேகமாக நடத்தப்பட்ட ஆய்வுகள், 24 குழு ரீதியான கலந்துரையாடல்கள், தகவல் வழங்குனர்கள் 15 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள், ஏனைய தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு,
பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவுப்பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் என்பன நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கலில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களுக்கு அப்பால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் வெகுவாக உயர்வடைந்துள்ளது. சேதன விவசாயத்திற்கு முழுமையாக மாறும் திட்டம் தோல்வியடைந்ததன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
எனவே தற்போது சீர்குலைந்திருக்கும் கட்டமைப்புக்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவை வழங்கல்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகளுக்கு அவசியமான வசதிகள் என்பன உடனடியாக சீரமைக்கப்படாவிட்டால், ஏற்கனவே வெகுவாகப் பாதிக்கப்பட்டுப் பின்னடைவைச் சந்தித்திருக்கும் மக்கள் மேலும் பின்நோக்கித் தள்ளப்படுவர். ஏற்கனவே நாட்டிலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் இந்நெருக்கடியைக் கையாள்வதற்கு உணவு வேளைகளைத் தவிர்த்தல், சுகாதாரசேவைப்பெறுகையை பிற்போடல், பிள்ளைகளின் பாடசாலைக்கல்வியை இடைநிறுத்தல் மற்றும் வருமானமீட்டும் நோக்கில் அவர்களை வேலைக்கு அனுப்புதல், தமது சொத்துக்களை விற்பனை செய்தல் போன்ற உத்திகளைக் கையாண்டுவருகின்றன. குறிப்பாக தற்போது 11 சதவீதமான குடும்பங்கள் வருமானத்தை இழந்திருக்கும் அதேவேளை, 62 சதவீதமான குடும்பங்களின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியேற்பட்டுள்ளது. அதேபோன்று நாட்டின் மொத்த சனத்தொகையில் 4.9 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நுண்பாகப்பொருளாதார சீர்குலைவானது சமூக மற்றும் குடும்ப மட்டத்தில் பாரிய மனிதாபிமான அவசரநிலையாக நிலைமாற்றமடைந்திருப்பதுடன் அதன்விளைவாக பெருமளவானோர் உணவு, எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி மக்கள்மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு ஒவ்வொரு துறைசார்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது