யாழ் மாநகர சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் இன்று 20.05.2021 சபையில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்காலின் கொல்லப்பட்ட எம்மவர்களினை நினைவேந்தல் இடம்பெறுவதற்கு கோரப்பட்டது.
அதன் போது தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட பிரதி தலைவரும், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயருமான து.ஈசன் உரையாற்றும் போது…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இருக்கின்ற நினைவுத் தூபியானது உடைக்கப்பட்டமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஏனெனில் நம் மக்களுடைய ஒட்டுமொத்தமான படுகொலையை எல்லோரும் நினைவுகூரும்
முகமாக அமைக்கப்பட்ட அந்த நினைவேந்தல் சின்னம் உடைக்கப்பட்டமை இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களுடைய உறவுகள் அவர்களை நினைவு கூருவதற்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் இருக்கின்ற அந்த ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறான நினைவுச் சின்னங்கள் உடைத்தழிக்கப் படுகின்றமை மிகவும் ஒரு கோரமான, சர்வாதிகாரத் தன்மையுடைய ஒரு இனத்தை அடக்கி அந்த இனத்தின் அபிலாசைகளை அழிக்கின்ற ஒரு ஆட்சித் தத்துவத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது.
ஆகவே இந்த ஆட்சியாளர்கள் அவ்வாறான ஒரு கோர முகத்தை வெளிக்காட்டி இருக்கிறார்கள். அரச இயந்திரத்தின் மூலமாகத்தான் அந்த நடுகல் உடைக்கப்பட்டிருக்கின்றது.
அது மாத்திரமல்ல அங்கு புதிதாக ஒரு நடுகல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினால் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டபோது அதுவும் இரவோடு இரவாக தூக்கிச் செல்லப்பட்டுள்ளது.
இது உண்மையில் ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகத்தான் நாங்கள் அதைப் பார்க்கின்றோம். ஏனெனில் உலகில் மனித உரிமைகளைப் பேணுகின்ற அமைப்பாக இன்று இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சாசனங்களில் இறந்தோரை நினைவுகூருவதற்கும் போரில் கொல்லப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்தல்
செய்வதற்கும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு என்ற தத்துவத்தை இலங்கை அரசாங்கம் மீறியிருக்கின்றது.
அது மாத்திரமில்லை, அந்த மக்களுடைய உறவுகளுடைய மன ஆறுதலை அவர்களுடைய பாதிப்புக்கான ஒரு நீதி கோரலை இந்த ஆட்சியாளர்கள் ஒரு போதும் செவிசாய்க்க மாட்டார்கள்
என்பது இந்த தூபி உடைப்பினூடாகக் கண்கூடாகத் தெரிகின்றது.
இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அதே
யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய உறவினர்கள் அந்த ஆத்மாக்களை நினைவேந்தல் செய்வதற்குத் தடை செய்தல் உண்மையிலேயே ஒரு அப்பட்டமான ஜனநாயக மீறல்.
இந்த நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இனம் தமிழினம். அந்த தமிழினத்தினுடைய தொன்மைகள் வரலாறுகள் சுயநிர்ணய உரிமை. மரபுவழி தாயகம் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இனம்.
அப்படிப்பட்ட ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாபெரும் இனப்படுகொலை நடந்த மாதம் என்று சொன்னால் அது 2009.05.18 மே மாதம் தான். 12 ஆண்டுகளாகியும் இன்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, நீதி கிடைக்காத போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இறந்த உறவுகளை வேண்டி நினைவேந்தல் செய்வதற்குக் கூட தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
உண்மையில் அவர்கள் யுத்த வெற்றியைத் தென்னிலங்கையில் அதுவும் மிகவும் ஆபத்தான கொவிட் – 19 தொற்று சூழ்நிலை இருக்கின்ற போதும் மிகவும் பெருந்தொகையானோருடன் சேர்ந்து கொண்டாடும் போது இங்கு பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகள் அந்த
இடத்தில் ஒன்றுகூடி தங்களுடைய மன ஆறுதலுக்கு அந்த நினைவேந்தலைச் செய்வதற்கு அவர்கள் இராணுவரத்தினரையும், பொலிஸாரையும் நிறுத்தி தடுத்திருக்கின்றார்கள்.
உண்மையில் இது ஒரு அப்பட்டமான ஒரு ஜனநாயக மீறல். இந்த ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கொடுப்பார்களா என்பது இவ்வாறான இந்த நினைவேந்தல் அடக்கு முறைகளில் இருந்தே தெரிகின்றது. ஒரு பொழுதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் மூலம் தீர்வு கிடைப்பதற்கு, நியாயம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்தும் நாங்கள் இந்த உள்நாட்டுக்குள் நீதி, நியாயம் கிடைக்கும் என்று இனியும் நம்பத் தயாராக இல்லை. அந்த வiயில் தமிழர் பிரதேசங்களில் இருக்கின்ற அனைத்த சக்திகளும் வட, கிழக்கு தமிழர் காயகத்தில் இருக்கின்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி
கிடைப்பதற்கு எல்லோரும் இணைந்து சர்வதேச நீதி பொறிமுறை ஊடாக எமது இனத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த இனப்படுகொலைக்கான நீதியை வேண்டுவதற்கு அனைவரும் ஓரணியில் திரளவேண்டுமென்று நான் கோரிக்கை விடுகின்றேன்.