ஆட்சி மாற்றங்களும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும்?

யதீந்திரா
ஆட்சி மாற்றமொன்று தேவை – அதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் எந்தப் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்றார்? ஒரு வேளை அவர், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசினால், ஆட்சி மாற்றம் தேவையென்னும் வாதம், சரியானதுதான் – ஏனெனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது கட்டாயமானது. தற்போதுள்ள அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

ஒரு புறம் ராஜபக்சக்கள் வீழ்சியுற்றாலும் கூட, மறுபுறமாக, அவர்கள் பொதுஜன பெரமுனவிற்குள் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆசன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அதிகாரங்கள் போய் சேர்வதை உறுதிப்படுத்துவதற்கான 21வது திருத்தச்சட்டமானது, தொடர்ந்தும் இழுபறிநிலையிலேயே இருக்கின்றது. இந்த நிலையில் ஒரு தேர்தல் இடம்பெற்றால் மட்டும்தான் இவை அனைத்திற்கும் ஒரு முடிவு கிடைக்கும். இந்த அடிப்படையில் சிந்தித்தால், சம்பந்தன் கூறுவது போன்று, ஒரு ஆட்சி மாற்றம் அவசியம்தான். ஆனால், ஒரு வேளை, சம்பந்தன், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை கருத்தில் கொண்டுதான், பேசுகின்றார் என்றால், ஆட்சி மாற்றம் தொடர்பில் கேள்விகளுண்டு. ஏனெனில் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவில்லை. புதிய அரசியல் யாப்பு ஒன்றிற்கான கற்பனையுடன் காலம் விரயம் செய்யப்பட்டது.

முன்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் நன்மைகளை தராதபோது, இனிவரப் போகும் ஆட்சிமாற்றமொன்றின் மூலம் எவ்வாறு தமிழ் மக்கள் நன்மைகளை பெறமுடியும்? இந்தக் கேள்விக்கான பதிலை கட்டுரையின் பின்பகுதியில் நீங்கள் காணலாம். முதலில் ஆட்சி மாற்றங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். இலங்கைத் தீவில் ஏற்படும் எந்தவொரு பிரதான அரசியல் மாற்றங்களும், தமிழ் மக்களை முன்வைத்து ஏற்படுவதில்லை. ஆகக் குறைந்தது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை ஒரு விடயமாகக் கூட இருப்பதில்லை. அது ஒரு போதும் நிகழவும் மாட்டாது. தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் எவையுமே, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவதும் இல்லை. அவ்வாறு பேசினால் தங்களின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமென்றே அவர்கள் கருதுகின்றனர். அவ்வாறாயின் மாற்றங்கள் எந்த அடிப்படையில் நிகழ்கின்றன? அனைத்துமே தென்னிலங்கை அதிகார மையத்திற்குள் ஏற்படும் முரண்பாடுகளின் காரணமாகவே நிகழ்கின்றன. இந்த மாற்றங்களே ஆட்சி மாற்றத்தை உந்தித் தள்ளுகின்றது. இவ்வாறுதான் 2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

தற்போது மீண்டுமொரு ஆட்சி மாற்றம் தொடர்பில் சிந்திக்கப்படுவதும் இந்த அடிப்படையில்தான். மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆதிக்கத்தின் மீதான அச்சத்தினடிப்படையில்தான், 2015 ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி உருவாக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேனவை மகிந்த முகாமிலிருந்து உடைத்தெடுப்பதற்கான வாய்ப்பான சூழல் அங்கிருந்தது. ராஜபக்ச குடும்ப அரசியல் ஆதிக்கத்தின் மீதேற்பட்ட அதிருப்திகளின் விழைவாகவே, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினர், மகிந்தவிற்கு எதிராக அணிதிரண்டனர். ராஜபக்ச முகாமின் உடைவைப் பயன்படுத்தியே, ராஜபக்சவை வீழ்த்துவதற்கான வியூகம் வகுக்கப்பட்டது. இந்த கூட்டணிக்கான மேலதிக ஆதரவாகவே தமிழ் மக்களின் வாக்குகள் பயன்பட்டன. இதன் காரணமாகவே, ஆட்சி மாற்றத்தின் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு ஒரு விடயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து அந்த ஆட்சி மாற்றம் நிகழவில்லை. 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இடம்பெற்ற விடயங்களிலிருந்தே, நீங்கள் இதனை தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். நல்லிணக்கம், அரசியல் தீர்வு தொடர்பில் ஆடம்பரமாக விவாதிக்கப்பட்டாலும் கூட, இறுதியில் ரணில்-மைத்திரி அதிகார மோதலைத் தொடர்ந்து, அனைத்து முயற்சிகளும் பூச்சிய நிலைக்கு சென்றது.
இப்போது ஆட்சி மாற்றத்தை எவ்வாறு கையாளுவதென்னும் கேள்விக்கு வருவோம். இந்தக் கட்டுரையாளர் மேலே குறிப்பிட்டவாறு ஆட்சி மாற்றத்தை விளங்கிக் கொண்டால், ஆட்சி மாற்றத்தில் தமிழர்கள் ஒரு போதுமே பிரதான விடயமாக இருக்கமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருக்காது. இந்த அடிப்படையிலிருந்துதான், எனவே, ஆட்சி மாற்றங்களை எவ்வாறு உச்சளவில் பயன்படுத்திக் கொள்ளலாமென்று, தமிழ் தலைமைகள்தான் சிந்திக்க வேண்டும். குறிப்பிட்ட அரசியல் சூழலில் எதனை முன்னிறுத்த வேண்டும் என்பதை தமிழ் தலைமைகளே சிந்திக்க வேண்டும். அதனடிப்படையில் குறிப்பிட்ட சூழலில் எடுத்துக்கொள்ளக் கூடிய விடயங்களை இலக்கு வைத்து செயற்பட வேண்டும்.

அவ்வாறானதொரு தூரநோக்குமிக்க பார்வை சம்பந்தனிடம் இருந்திருந்தால், 2015இல் ஏற்பட்ட ஆட்சி;மாற்றத்தை தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி உச்சளவில் பயன்படுத்தியிருக்க முடியும் ஆனால் சம்பந்தனது தவறான அரசியல் அணுகுமுறைகளால், கிடைத்த அருமையானதொரு வாய்ப்பு கைநழுவியது. ஆட்சி மாற்றத்திற்கான சூழலொன்று தெரிந்த சந்தர்பத்தில், இந்தக் கட்டுரையாளர் சம்பந்தனிடம் சில விடயங்களை வலியுறுத்தியிருந்தார். அதாவது, இந்த ஆட்சி மாற்றம் அதிக காலத்திற்கு நீடிக்காது ஏனெனில், இரண்டு முற்றிலும் மாறுபட்ட அரசியல் கருத்தியல், வெளிவிவகார பாரம்பரியம் கொண்ட கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரும், இணைந்து முன்னெடுக்கும் இந்த ஆட்சி மாற்றமானது, நிச்சயம், உள்முரண்பாடுகளுக்குள் சிக்கும், எனவே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, பெறக் கூடிய விடயங்களை பெற முயற்சிப்பதே சரியானதென்று இந்தக் கட்டுரையாளர் சம்பந்தனிடம் வலியுறுத்தியிருந்தார். ஆனால் சம்பந்தன் எதனையும் உள்வாங்கிக் கொள்ளவில்லை.

புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரமுடியுமென்று நம்பி செயற்பட்டதுதான், சம்பந்தன் மேற்கொண்ட மோசமான தவறாகும். இந்தத் தவறிலிருந்துதான் அனைத்து தவறுகளும் நிகழ்ந்தன. உண்மையில் அப்படியானதொரு அரசியல் யாப்பை கொண்டுவருவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் புதிய அரசியல்யாப்பு என்னும் பெயரில், காலம் வீணடிக்கப்பட்டது. இதற்கு பதிலாக, இருக்கின்ற அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, மாகாண சபை நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். இதனை, நான் உட்பட, சிலர் பரிந்துரைத்திருந்த போதும், சம்பந்தன் அவர்களை பொருட்படுத்தவில்லை. அதே வேளை, கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதாக வெளியிலிருந்து சுட்டிக்காட்டியவர்களும், வரமுடியாத புதிய அரசியல் யாப்பிற்குள் எவற்றையெல்லாம் உள்ளடக்க வேண்டுமென்றே விவாதம் புரிந்தனர். புதிய அரசியல் யாப்பின் மூலம் கூட்டமைப்பு ஒரு பாரிய சதியில் ஈடுபடுவதாக கதைகள் புனைந்தனர். ஆனால் இறுதியில் அனைத்து கதைகளும் பெறுமதியற்றுப் போயின. உண்மையில் கூட்டமைப்பு சதி செய்யவில்லை, மாறாக, கற்பனையில் காலத்தை விரயம் செய்தது. ஏனையவர்கள் கூட்டமைப்பின் கற்பனை பற்றி, கற்பனை செய்தனர். புதிய அரசியல் யாப்பு தொடர்பான உரையாடல்கள் அனைத்தும், இறுதியில், கற்பனை தொடர்பான கற்பனைகளுடன் முடிவுற்றது. எப்போதெல்லாம் யதார்த்தம் புறம்தள்ளப்படுகின்றதோ – அப்போதெல்லாம் வெறும் கற்பனைகளிலேயே காலம் கரையும்.

மீண்டும் தென்னிலங்கையின் அரசியல் மோசமாக குழம்பியிருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான், ஆட்சி மாற்றமொன்றின் தேவை உணரப்படுகின்றது. நிச்சயம் அதுதான் நிகழவும் போகின்றது. ராஜபக்சக்கள் வீழ்சியுற்றிருக்கின்ற சூழலில், புதியதொரு தலைமைக்கான பலப்பரிட்சையிலேயே தென்னிலங்கையின் அரசியல் நிலைகொண்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன, வீழ்ச்சியடைந்திருக்கின்ற அதே வேளை, எதிரணிக்குள்ளும் பிளவுகள் காணப்படுகின்றன. ஒப்பீட்டடிப்படையில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி அளவில் பெரிய எதிரணியாக இருந்த போதிலும் கூட, சஜித் பிரேமதாசவினால் தனித்து அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. எனவே ஆட்சி மாற்றத்திற்கு ஒரு வலுவானதொரு கூட்டணி தேவை. அதே வேளை, ரணில் தற்போதைய நெருக்கடி நிலையை கையாளும் பொறுப்பை ஏற்றிருப்பதால், ஜக்கிய தேசியக் கட்சியை மீளவும் ஒழுங்கமைப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. ஜக்கிய தேசியக் கட்சி தலைமையில் வலுவானதொரு கூட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களையும் முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. ஆனால் வரப்போகும் ஆட்சி மாற்றத்தின் போது, தமிழ் மக்களின் வாக்குகள் பிரதானமாக தேவைப்படுமென்றும் கூறிவிட முடியாது. ஏனெனில் தென்னிலங்கையின் கட்சிகளுக்கிடையில், பலமானதொரு மோதல்நிலை இருக்கின்ற போதுதான், தமிழ் மக்களின் வாக்குகள் மேலதிகமாக தேவைப்படும். அவ்வாறானதொரு போட்டிநிலை இல்லாவிட்டால், ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்கள் பிரதான பங்கை வகிக்க முடியாமலும் போகலாம். எது எவ்வாறிருப்பினும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்தையும், பயன்படுத்திக் கொள்வது, தமிழ் தலைமைகளின் ஆளுமையில்தான் தங்கியிருக்கின்றது.