ஆயரின் மறைவிற்கு வலி கிழக்குப் பிரதேச சபை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது -ரெலோ தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களது பங்களிப்பு மதிப்பிடப்பட முடியாதது. அவரது இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உள்ளூராட்சி மன்றம் என்ற வகையில் உத்தியோகபூர்வமாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

போரின் போதும் போருக்குப் பின்பாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை நியாயமாக வெளிப்படுத்தும் நடுநிலையாளராக மறைந்த ஆயார் அதிமேதகு இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் செயற்பட்டார்.

தமிழ் மக்களுக்காக அவர் எடுத்துக்கொண்ட நீதியான வகிபாகத்தின் நிமிர்த்தம் பல சவால்களையும் விமர்சனங்களையும் சந்தித்தார். ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தினை வழங்கவேண்டும் என்பதில் உறுதியாகவும் உணர்வாகவும் அவர் செயற்பட்டுவந்தார்.

தமிழ்த் தேசியப் பரப்பில் மதங்களைக் கடந்து எமது மக்கள் விடுதலை அடையவேண்டும் என்ற உறுதியோடு பயணித்த உத்தமர் ஒருவரையே தமிழ் இனம் இழந்து நிற்கின்றது.

தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படுவதற்காக சர்வதேச சமூகம் இறுக்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை ஆயர் பக்கசார்பற்று நடு நிலையாளராக ஐ.நா. வரை வலியுறுத்தி வந்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி மீள்குடியேற்றம் என அவரது பங்களிப்பு மனித உரிமைகளுக்கு அடிப்படையானதாக அமைந்தது. இதற்கு மேலாக இராணுவமயமாக்கம் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மதகுருமாரையும் சிவில் அமைப்புக்களையும் ஒன்றிணைத்துச் செயற்பட்ட ஒருவரையே நாம் இழந்து நிற்கின்றோம்.

எமது இனத்தின் மீதான ஒடுக்கு முறைகளை வெளிப்படுத்தும் உலகம் ஏற்றுக்கொண்ட ஒருவரான அவரை இழந்து இனம் தவிக்கின்றது என்பதே உண்மை. அவர் போன்றவர்கள் எம் இனத்திற்குத் தீர்வு கிட்டுவரையிலாவது இருந்திருக்க வேண்டும். அதற்குக் காலம் சந்தர்ப்பமளிக்கவில்லை. அவர் காட்டிச் சென்ற பாதையை எல்லோரும் பின்தொடரவேண்டும் என்பதே இன்றைய கடமை.

தமிழ் மக்களின் விடயங்களுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்தினர் மீது முடுக்கிவிடப்பட்ட தாக்குதல்கள் சிறைகளில் சிங்கள கைதிகள் கொல்லப்பட்டமை ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கவியலாளர்கள் மாணவ தலைவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்காகவும் எதிர்த்துப்போராடினார். ஜனநாகக் கருத்துருவாக்கத்திலும் மனித உரிமைகளுக்காக குரலற்றவர்களுக்கான குரலாக விளங்கியமையிலும் ஆயரின் பணி அளப்பரியது.

இந் நிலையில் வலிகாமம் பிரதேச சபை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது என அதன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.