இலங்கையில் இருந்து வெளியேற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி பிரித்தானிய பிரஜையான ஸ்கொட்லாந்து யுவதி கெலின் பிரேஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
காலிமுகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோ கம போராட்டத்தில் தான் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு வழங்கியதாக மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.
இதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனக்கு வழங்கப்பட்டிருந்த விசா அனுமதியை தன்னிச்சையாக இரத்துச் செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வித நியாயமான அடிப்படைகளும் இன்றி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து, அதனை செல்லுப்படியற்றது என அறிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியுள்ளார்.