கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை சிறப்பாக உணர்த்தும் காலம் கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் காலமாகும் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
2022ஆம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை இன மத நிற மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதும் கொண்டாடும் இவ்வேளை கிறிஸ்து பிறப்பின் பெருவிழா வாழ்த்துக்களை முதலில் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கிறோம்.
வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார் (யோவான்1:1-14) என்ற யோவான் நற்செய்தியாளரின் வார்த்தைகள் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையைத் தெளிவாகத் வெளிப்படுத்துகிறது.
கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையையும் கிறிஸ்து பிறப்பின் மகிழ்வையும் நம்பிக்கையையும் அர்த்தத்தையும் எமது எந்தத் துன்பமான காலநிலையம் இக்கட்டான அனுபவமும் என்றும் குறைத்து விடவோ எடுத்து விடவோ முடியாது.
நீங்கள் உங்கள் ஆலயங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிவும் அமைக்கும் கிறிஸ்து பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்மஸ் குடிலும் அதனோடு இணைந்த கிறிஸ்மஸ் மரமும் மின் விளக்குச் சோடினைகளும் நடத்தும் ஒளி விழாக்களும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையான நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும்.
இந்த அடையாளங்களின் வெளி அர்த்தத்தை தாண்டிச் சென்று அவற்றின் வழியாக வெளிப்படுத்தப்படும் இறை இருப்பையும் இறை அன்பின் மனமகிழ்வையும் உங்கள் மனதுகளில் முழுவதுமாக உணர்ந்து இயன்றவரை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை நாம் சிறப்பாக உணர்ந்து அந்த உண்மையை பகிர்ந்து கொள்ள சிறப்பாக அழைப்பு விடுக்கும் காலம் கிறிஸ்து பிறப்பு விழா காலமாகும்.
இன்றைய இக்கட்டான பொருளாதார நிலையிலும் அன்றாடப் பொருட்களின் தட்டுப்பாடுக்கு மத்தியிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலையிலும் கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் இருக்கும் இந்த இக்கட்டான வேளையில் இந்த அன்பின் பகிர்வு கட்டாயமாகப் பணமாகப் பொருளாக உணவாக ஆடையாக இருக்க வேண்டுமென்பதில்லை.
தேவையில் இருப்போர்க்கு உடலுதவி செய்தல் – துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் தெரிவித்தல் – வைத்தியசாலையில் துன்பப்படுவோரைச் தரிசித்தல் – சிறைச்சாலைகளில் வாடுவோரைச் சந்தித்தல் போன்ற செயல்கள் மூலம் கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை வெளிப்படுத்துங்கள்.
இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்பதாகும் (லூக்காஸ் 2:13-14)
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக எனத் தெரிவித்து இறையாசீர் மிக்க கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என்றுள்ளது