இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம்

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் பாரிய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) 15 அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது.
அதேநேரம்  பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வராவிட்டால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சை குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) பிற்பகல் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுயேச்சைக் குழு ஒன்று கூடி இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஆட்சியைக் கைப்பற்றும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டால், நாட்டை அராஜகமாக்க விடமாட்டோம் என்றும், மேலும் பல கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களால் உருவாக்கப்படும் தேசிய சபையில் இருந்து புதிய பிரதமரை தெரிவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.