இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருந்து மற்றும் சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்றும் இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் திங்கட்கிழமை (டிச. 5) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் ரவீந்திர கஹந்தவாராச்சி,
தற்போது உயிரிழக்கும் நோயாளர்களின் மரண சான்றிதழில் எந்த இடத்திலும் மருந்து இன்மையே அவர்களது உயிரிழப்பிற்கு காரணமாகும் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக குறித்த நோய் நிலைமை காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்படுகிறது.
எமது நாட்டில் அதிகளவில் பதிவாவது இதய நோயாளர்களாவர். இதய நோயாளர்களுக்கு கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை மருந்துகளுக்கும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களுக்கும் தற்போது வைத்தியசாலைகளில் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
இது மாத்திரமின்றி நோயாளர்களுக்கு ‘எக்ஸ் ரே’ எடுப்பதற்கான வசதிகளும் தற்போது இல்லை. இவ்வாறான தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு வைத்தியசாலை கட்டமைப்பினை நிர்வகித்துச் செல்வது? உயிரற்ற நபர்கள் நாட்டை ஆட்சி செய்வதைப் போன்ற நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பீ.மெதிவத்த, இவ்வாறான அபாய நிலைமை ஏற்படும் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அறிவித்தோம்.
ஆனால் அதனை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான சிறந்த தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.