இக்கட்டான நிலையில் நாட்டு மக்களுக்காக இரவிரவாக தூங்காது பணிசெய்யும் ஒரு ஜனாதிபதியை இந்த நாடும் நாமும் பெற்றதற்காக பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். பாகுபாடுகள் வேண்டாம். எதிர்க்கட்சிகள் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்காதீர்கள். அரசாங்கத்துடன் எவ்வித கோபமும் கிடையாது. அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இயற்கை அனர்த்தத்திற்கு அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முடியாது. தற்போதைய நெருக்கடியில் இருந்து எவ்வாறு மீளலாம் என்ற ஆலோசனைகளை அனைவரும் முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தை விமர்சிக்கும் நேரம் இதுவல்ல. ஜனாதிபதிக்கு நான் நன்றி கூறுகின்றேன். இரவு பகலாக அவர் முழு மூச்சாக செயற்படுகின்றார்.அவருக்கும் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது அயல் நாடான இந்தியாவுடன் அரசாங்கம் இணக்கமாகவே செயற்பட வேண்டும். இந்தியாதான் எங்களுக்கு முதலில் உதவி செய்யும் நாடு. எனவே இந்தியாவின் கரத்தை இறுக்கப் பிடிப்பதுதான் எமது நாட்டுக்கு நல்லது. இந்தியப் பிரதமர் , தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகியோருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றேன்.
எமது வன்னி மாவட்டத்தில் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை, நகரசபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள், தொண்டர்கள் முப்படையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயற்கை அனர்த்தத்தால் மன்னார் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தை கவனத்திற் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகள், கடற் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு வீட்டுக்கு 25000 ரூபா கொடுக்கப்படுவதை அறிந்த மகிழ்ச்சி, இன்னும் கொஞ்சம் அந்தத்தொகையை அதிகரிக்க வேண்டும் எமது பிரதேச சபை, நகரசபைகளின் தவிசாளர்கள் இயற்கை அனர்த்தம் தொடர்பில் முழு மூச்சாக செயற்படுகின்றார்கள் அவர்களுக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது 100 வீதம் ஒரு வேலையை பூரணமாக செய்ய முடியாது. ஒரு சில குறைகள் இருக்கும். எனவே அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அனர்த்தத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே குறைகளை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை முன்வையுங்கள்.
அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். எல்லோரும் இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம். பாகுபாடுகள் வேண்டாம்.எதிர்க்கட்சிகள் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்காதீர்கள். நாம் அன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்த்து எமக்கு நேரம் தரவில்லை என்பதற்காக மட்டுமே. அரசாங்கத்துடன் எவ்வித கோபமும் கிடையாது.அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என்றார்.