இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளுக்காக வடமாகாணத்தில் நடமாடும் சேவை!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடமாடும் சேவைகள் எதிர்வரும் 31 ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் நவம்பர் முதலாம் திகதி கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்திலும் இந்த நடமாடும் சேவைகள் இடம்பெறவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்கள் வட மாகாணத்திற்கு திரும்பி மீண்டும் குடியேறியுள்ளனர்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மேற்பார்வையில், அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.